பா.ஜ.க இயற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கணைகள் எழுந்துள்ளன. அதன் வெளிப்பாடாகவே கடந்த சில நாட்களாக நாடே போராட்டக் களமாக உருமாறியுள்ளது.
கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், மாநில முதலமைச்சர்கள் என பலரும் போராட்டத்தில் இறங்கி குடியுரிமை சட்டத் திருத்ததை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் சினிமா பிரபலங்களும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் தங்களது எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே தமிழ் சினிமா நடிகர் சித்தார்த் இந்த சட்டத்துக்கு எதிராக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பற்ற கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மதச்சார்பின்மையை நீடிக்க வைப்போம், குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டுக்கு ‘நோ’ சொல்வோம். மாணவர்கள் மீதான போலிஸின் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பாராஜின் இந்த ட்வீட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.