விஜய்-அட்லி கூட்டணியில் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, இந்துஜா, கதிர், ஆனந்த் ராஜ் எனப் பலர் நடித்துள்ளனர்.
பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், தமிழகம் உட்பட உலகளவில் படம் பட்ஜெட்டை விட அதிமாகவே வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விவரத்தை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், 2019ம் ஆண்டு வெளியான படங்களில் அதிகளவு வசூலித்த படங்களில் முதலிடத்தில் ‘பிகில்’ படம் உள்ளதாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிகில் படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை படத்தின் வசூல் என்ன என கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்தப் பதிவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.