குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நடிகர் சித்தார்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இரு தினங்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், “எடப்பாடி பழனிசாமி எனது மாநிலத்திற்கும், என் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பதை வெட்கக் கேடாக உணர்கிறேன். குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அவரது சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. இவற்றுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்தாக வேண்டும்” என குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்தார்த் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பியபோது, “சித்தார்த்தா..? அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார்? விளம்பரத்துக்காக சிலர் இப்படியெல்லாம் கேள்விகளை முன்வைப்பார்கள். அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை” என பேசியுள்ளார்
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், ”அவர் நான் யார் என்று கேட்கிறார். பரவாயில்லை. அவருடைய அரசுதான் எனக்கு 2014ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 2017ம் ஆண்டு அறிவித்தது. அது இதுவரை என் கையில் தரப்படவில்லை.”
“எனக்கான இடத்தை நான் நேர்மையாக உழைத்து பெற்றுள்ளேன் பாக்ஸர் அங்கிள். விளம்பரத்திற்காக பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையை பாருங்கள். அதுவே போதும்.” என சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.