'தர்பார்' படத்தின் வேலைகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான தனது 168வது படத்தில் இணைந்துள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
‘ரஜினி 168’ படத்தில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு என பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் காமெடி நடிகர் சூரியை தவிர வேறு எவர் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆகையால் ரசிகர்கள், படத்தின் அடுத்தத்தடுத்த அப்டேட் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் ரஜினி 168ல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை மீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினிகாந்துடன் முதன்முறையாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினி 168ல் இணைந்தது குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவது மறக்கமுடியாத நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.
1981ம் ஆண்டு வெளிவந்த ‘நெற்றிக்கண்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இது மட்டுமல்லாமல், அடுத்தபடியாக ரஜினி 168ல் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார் எனவும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படையப்பா படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்திலும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.