பரியேறும் பெருமாள் எனும் சினிமாவைக் கொடுத்த, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனில் இருந்து இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. திரைப்படங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல.. கேளிக்கைக்கு நடுவே சிந்தனையை விதைக்கும் படமாக ‘இ.உ.போ.க. குண்டு’ ரசிகர்களின் மனதில் விழுந்ததா?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பயன்படுத்தப்படாத குண்டுகளை அந்தந்த நாடுகள் செயலிலக்க வைத்தன. அதில் நடந்த ஊழலால், செயலிலக்கப்படாத ஒரு குண்டு மகாபலிபுரம் கடற்கரையில் கரை ஒதுங்குகிறது. இரும்புக் கடைக்கு வந்துசேரும் குண்டு வெடித்ததா? இரும்புக் கடையில் வேலை செய்யும் தினேஷின் வாழ்கையோடு மோதும் குண்டு சொல்லும் அரசியலும், தினேஷின் எதிர்கொள்ளலுமே திரைக்கதை.
ரசிகர்களை பார்க்க தூண்டும் முதல் ஈர்ப்பு படத்தின் பெயர் தான். புதுமையான பெயரும், அதில் இருக்கும் கதையுமே முதல் ஆச்சர்யம். நிகழ்காலத்து ஊழல்களை படமாக்கும் இயக்குநர்கள் மத்தியில், வரலாற்றில் நடந்த ஊழலை, அதன் சூழலை மையமாக கொண்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
‘குக்கூ’ மற்றும் ‘விசாரணை’ என நேர்த்தியான நடிப்பைக் கொடுத்தவர் தினேஷ். இந்தப் படத்திலும் கதாப்பாத்திரத்துடன் ஒட்டி வாழ்கிறார். தொழிலாளியாக குரல் உயர்த்தும் இடத்திலும், இயலாமையால் முகம் கவிழும் இடத்திலும் என அத்தனை அழகாக நடிக்கிறார்.
படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு சமூக பிரச்னைக்கான பிரதியாக வருகிறார்கள். சாதிய பிரச்னைக்கு சாட்டையடியாக ஆனந்தி, கம்யூனிச சித்தாந்தத்துடன் தோழர் ரித்விகா, பெரும் முதலாளித்துவ துளியாக ஜான் விஜய், முதலாளித்துவ கைப்பாவையாக லிஜீஸ், நசுக்கப்படுவதே தெரியாமல், வாழும் ஏழை தொழிலாளியாக முனிஸ்காந்த் என ஒவ்வொரு கேரக்டரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் - ஆனந்திக்கு என தனியாக காதல் காட்சிகள் என்றில்லாமல், பரபர காட்சிக்கு நடுவே வந்துபோகும் மாண்டேஜ்ஜூகள் சுவாரஸ்யம். குண்டு வெடிச்சா ஒரு ஊரே அழிஞ்சிப்போகும் என்கிற பதட்டத்தை இறுதி வரை ரசிகனின் மனதுக்குள் கொண்டு செல்கிறது திரைக்கதை.
உலக அரசியலில் துவங்கி உள்ளூர் சமூகப் பிரச்னை வரை படம் பேசியிருக்கிறது. நிச்சயமாகவே இயக்குநர் அதியன் ஆதிரை பாராட்டுக்குரியவர். நிறைய விஷயங்களை படத்துக்குள் பேசிச்சென்றாலும், கதைக்குள் மட்டுமே படம் பயணித்தது சிறப்பு. கருத்து சார்ந்த படமென்றால் இறுகிய முகத்தோடு நடிகர்கள் இருப்பார்கள், படம் சீரியஸாக நகரும் என்றில்லாமல் படத்துக்குள் காதல், நகைச்சுவை, த்ரில்லர் , சுவாரஸ்யம் என சினிமாவாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
நிலமெல்லாம், இருச்சி என ஒவ்வொரு பாடலுமே படத்துக்கான கூடுதல் பலம். தென்மாவின் பின்னணி இசையும், அதற்கேற்ப கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும் படத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறது. வெல்கம் தென்மா!
சில கேள்விகளும், வேறுபாடுகளும் திரைக்கதையில் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்துவிடலாம். ஏனெனில் வாராவாரம் வரும் காமாசோமா படத்துக்கு நடுவே நிச்சயம் ‘குண்டு’ அமைதியான பாய்ச்சல். வித்தியாசமான களம், எந்த வித மிகைப்படுத்துதலும் இன்றி எளிமையானவர்களின் வாழ்க்கையை எளிமையாக சொன்னதுக்காகவும், அதில் அரசியலையும், சிந்தனையும் சொன்னதற்காகவும் பார்க்கவேண்டிய படம் இ.உ.போ.க.குண்டு.
-சபரி செல்வ விநாயகம்