விஜயுடனான சர்கார் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் தர்பார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.
நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் சும்மா கிழி பாடல் ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பலரை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தர்பார் படக்குழு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஆடியோ வெளியீட்டு மேடையில் லைகா நிறுவனத்தின் கத்தி படம் தொடங்கி 2.0 வரையிலான படத்தின் சிறப்பு வீடியோ ஒளிபரப்பட்டது. அதன் பின்னர் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தற்போதைய இளம் நடிகர்கள் அனைவருக்கும் போட்டியாக ரஜினிகாந்தின் ஸ்டைலும், நடிப்பும் அமைந்திருக்கும். ரஜினியின் மூத்த ரசிகனே நான் தான் என பேசியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தளபதியில் பார்த்தது போலவே இப்போதும் ரஜினிகாந்த் இருக்கிறார் என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பேசியுள்ளார்.
ஆடியோ வெளியீட்டை அடுத்து, நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்த ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் #DarbarAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, தர்பார் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.