வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டே உருவாக இருந்த சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு பிரச்னைகள் காரணமாக நடைபெறாமல் தள்ளிப்போனது. தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் இடையேயான பிரச்னைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டதால் மீண்டும் ‘மாநாடு’ கூடியுள்ளது.
தற்போது, நடிகர் சிம்பு சபரிமலை செல்வதற்காக விரதமிருந்து வருவதால், மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்தபிறகு தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில், முக்கியமான தகவல் என்னவென்றால், ஜனவரி 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ம் தேதி வரை ‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்காக மொத்தமாக 80 நாட்களுக்கு சிம்பு கால்ஷீட் கொடுத்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வந்த எந்தப் படங்களுக்கும் சிம்பு இப்படி ஒரு கால்ஷீட்டை ஒதுக்கியதில்லை. படத்தின் பூஜைக்கு முன்பே மாநாடு படத்துக்கு எக்கச்சக்கமான பிரச்னைகள் வந்ததால் சிறப்பு கவனம் செலுத்தி சிம்பு விரைவில் தன்னுடைய பணியை முடித்துக்கொடுக்கவுள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆகையால், ஜனவரி 20ம் தேதி மாநாடு படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கும் என படக்குழு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
சமீபமாக வெளிவந்த சிம்புவின் படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் ஆகவில்லை என்பதால் மாநாடு படத்தின் மீது சிம்பு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு ‘மாநாடு’ அமையுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.