தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகைகளின் படம் ரிலீசாகும் போதெல்லாம் வாராவாரம் ஆரவாராமாகி வருகிறது. அதிலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த படம் என்றால் அதற்கு எல்லையே இருக்காது.
அதே சமயம், படம் பார்க்க தியேட்டரில் அமர்ந்ததும் ஒவ்வொரு சீனையும் செல்போனில் படம் பிடித்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். சாதாரண ரசிகர்கள் செய்வதால் இணையத்தில் புதுப்படங்கள் பதிவேற்றம் செய்பவர்களும் இதனை சாக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என பல தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில், கடுமையான பிரச்னைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது தனுஷ் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படம். அப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில், நடந்த நிகழ்வை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதன் உரிமையாளர் ராகேஷ் கவுதமன்.
அதில், “சத்தியமா சொல்லுங்க இது முறையா? பிடித்தமான நடிகர்களின் படங்களுக்கு கை தட்டி, விசிலடித்து கொண்டாடிய காலம் போய், சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவதே முக்கியமானதாக தற்போது கருதப்படுகிறது”
“இதுபோன்றவற்றை அடக்குவதற்கு எனக்கு பவுன்சர்கள் தேவையில்லை. பக்ஷிராஜன் தான் தேவை. நான் என்ன பன்னிட்டு இருக்கேன்னு யாரும் கேள்வி கேக்காதீங்க. இங்க நடக்கும் அட்ராசிட்டியதான் படம் எடுத்துருக்கேன். திரையை அல்ல”
என பதிவிட்டு திரையை நோக்கி ரசிகர்கள் அனைவரும் செல்போனை எடுத்து படம் பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வெற்றி தியேட்டரின் ராகேஷ் கவுதமன்.
இவரது பதிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரசிகர்கள் தரப்பில் இருந்து இந்த பதிவுக்கு விமர்சகர்கள் செய்தால் தப்பில்லை, ரசிகர்கள் செய்தால் தவறா என பலர் விமர்சித்துள்ளனர்.