ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சும்மா கிழி' பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஒரு பக்கம் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், மறுபுறம் இந்தப் பாடல் பல பாடல்களை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ‘தர்பார்’. இப்படம் ரஜினியின் 167வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான ‘சும்மா கிழி’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
இந்நிலையில் ‛தர்பார்' படத்தின் ‛சும்மா கிழி கிழி' பாடல், 'கட்டோடு கட்டு முடி' எனத் தொடங்கும் ஐயப்பன் பற்றிய பாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள், அனிருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுதவிர, 1990ல் தேவா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது, மனசு தவிக்குது” என்ற பாடலைத்தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என்றும் விமர்சிக்கின்றனர்.
’சும்மா கிழி’ பாடலைக் கேட்கும்போது 'அண்ணாமலை’ படத்தின் ‘வந்தேண்டா பால்காரன்’, ‘பேட்ட' படத்தின் 'மரணம் மாஸு மரணம்', 'வேதாளம்' படத்தின் 'வீர விநாயகா', ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் ‘கொண்டாடும் மனசு’ ஆகிய பாடல்களும் இடையிடையே நினைவுக்கு வந்து போவதாக பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.