விஜய்யின் 64வது படம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி கிரியேட்டர்ஸ் அறிவித்திருந்தது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாததால் தளபதி 64 /விஜய் 64 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்து டெல்லியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது கல்லூரி மாணவன் கெட்டப்பில் விஜய் ஐடி கார்டு அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்லியை அடுத்து விஜய் 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஷூட்டிங் நடத்துவதற்காக அம்மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற கடிதமும் ட்விட்டரில் பரவி வருகிறது. அதில், டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை ஷிமோகா சிறைச்சாலையில் ஷூட்டிங் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனவரி 1ம் தேதி விஜய் 64 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக படக்குழு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.