விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.,25ம் தேதி வெளியானது பிகில் படம். இதனை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வழக்கம் போல படம் ஹிட்டாகியுள்ளது.
180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான இந்த படம் உலகளவில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் ஆகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
தமிழக உரிமையை பெற்றிருந்த ஸ்கீரின் சீன் நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு பிகில் படத்தை வாங்கியிருந்தது. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு சாத்தியமில்லை என கருதிய நிலையில் ரூ.80 கோடியை கடந்து பிகில் படம் வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் தயாரிப்பாளரும், சினிமா விநியோகஸ்தருமான பாஃப்டா தனஞ்செயன், பிகில் படத்தின் வசூல் சாதனையை பட்டியலிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியது.
உடனே விஸ்வாசம் வசூலை மேற்கோள் காட்டி தனஞ்செயனுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “விஸ்வாசம் வசூல் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டது” என பதிலளித்தது விஸ்வாசம் படத்தின் விநியோக நிறுவனமான கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தனஞ்செயனின் பதிவுக்கு விஸ்வாசம் வசூல் தொடர்பாக அவர் பேசிய வீடியோவை இணைத்து பதிலளித்த கே.ஜே.ஆர், “சிலர் இப்டியும் பேசுவாங்க அப்டியும் பேசுவாங்க. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.”
“பிகில் சக்ஸஸா? நாங்க ஹேப்பி, நாளைக்கு தர்பார் சக்ஸஸா? அதுக்கும் நாங்க ஹேப்பி. எல்லாம் நம்ம தமிழ் இண்டஸ்ட்ரி தானே?” என பதிவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தனஞ்செயன், “பிகில் 80 கோடிக்கு தமிழகத்தில் வசூலித்தது தொடர்பாக விவரமாக சொன்னேன். அதேபோல அவரது படமும் அதை விட அதிகமாக வசூலித்தது என உறுதியாக விவரங்களுடன் சொன்னால் சத்ய ஜோதி நிறுவனத்துடன் இணைந்து நானும் கொண்டாடுவேன்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிரடியாக பதிலடி கொடுத்த கே.ஜே.ஆர்., “அடுத்தவன் வீட்ட எட்டி பாத்துட்டு குத்தம் சொல்றதுக்கு முன்னாடி தான் வீடு சரியா இருக்கானு பாக்கனும். சார், விஸ்வாசம் படத்தோட வெற்றிய ஜனவரி மாதத்துல இருந்து கொண்டாடிட்டு வரோம். வேனும்னா நீங்களும் வாங்க கொண்டாடுவோம். எங்க ஆஃபிஸ் கதவு எப்போவும் திறந்தேதான் இருக்கு” என பதிவிட்டது அஜித் ரசிகர்களிடையே புற்றீசல் போல பரவியது.
இதற்கும் பதிலளித்த தனஞ்செயன் “உங்களால் சரியான வசூலை தெரிவிக்க முடியாவிட்டால் விவாதிக்க வேண்டாம்” என ட்விட்டரில் பதிவிட இருதரப்பும் அதற்கு பிறகு எந்த பதிவும் இடவில்லை. ஆனால் இவர்களின் வசூல் சண்டையால் அஜித் விஜய் ரசிகர்களிடையே போர் மூண்டது போல் ட்விட்டரில் சண்டையிட்டுக்கொண்டனர்.
இருதரப்பும் மாறி மாறி #வரசொல்ல_ஆப்பிஸ்-இல்லையே , #அழிவின்விளிம்பில்AGS என ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னையளவில் முன்னிலை வகிக்கின்றன.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி படங்களில் நடித்து வரும் நடிகர்களே ஒற்றுமையாக இருக்கும் போது ரசிகர்கள் என்ற பெயரில் சண்டையிட்டுக் கொள்வது சரியில்லை என விஜய், அஜித்தின் வீடியோக்களை பகிர்ந்து நடுநிலையாக உள்ள ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.