செக்கச்சிவந்த வானம் படத்துக்கு பிறகு கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ஜெயராம், பார்த்திபன், ரகுமான், அமலாபால், ஜெயம்ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளனர்.
ஆனால், நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை மணிரத்னம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. இருப்பினும் படத்தின் படபிடிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகவும், ரூ.800 கோடி செலவில் கதை தாய்லாந்தில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது படக்குழு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்துள்ள அவரது மகன் ஆரவ்வும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மணிரத்னத்தின் ஆஸ்தான படக்குழுவான ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, தோட்டா தரணிதான் பொன்னியின் செல்வன் படத்திலும் பணியாற்றவுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.