சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலையை கமல் மற்றும் ரஜினி இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நாசர், சுஹாசினி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் பாலசந்தரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கமல்ஹாசன் நேற்று பெற்றுத்தந்த தந்தைக்கு பரமக்குடியில் சிலை திறந்தார். இன்று கற்றுத்தந்த தந்தைக்கு சென்னையில் ஒரு சிலை. இரு தகப்பனுக்கும் சிலை அமைத்து நன்றிக்கு சாட்சியாக விளங்கும் கமலை வாழ்த்துகிறேன். இது நாகரீகத்தின் முன்னேற்றம்.
கலை ஆசானாக பாலசந்தரை கொண்டாடியவர் கமல். தமிழகத்திற்கு 2 பொக்கிஷங்களைக் கொடுத்தவர் பாலசந்தர். இந்தியாவின் கலை அவதாரமாகத் திகழும் கமலையும், ரஜினியையும் அறிமுகம் செய்தவர் பாலசந்தர். பாலசந்தரின் மேல் 2 பேருக்கும் இருக்கும் காதலின் அடையாளம் தான் இந்த சிலை திறப்பு.
நான் பாலசந்தருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவன். நான் ஓடிக்கொண்டிருப்பதற்கு தமிழும், பாரதிராஜாவும், பாலசந்தரும் தான் காரணம்.
2 கலை சின்னங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறார்கள் அவர்கள் பாலசந்தரின் மடியில் வளர்ந்தவர்கள். கலை மேதையின் சிலையை நிறுவியதற்கு வாழ்த்துகள்.
பாலச்சந்தருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம். ஆனால் இந்தச் சிலையை கமல் வைப்பதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. கற்றுக்கொடுத்தவருக்கு சிலை வைப்பதை சமூகமும் உலகமும் கற்றுக்கொள்ளட்டும்.” எனப் பேசினார்.