காலம் காலமாக சினிமாக்களில் வரும் பல்வேறு திரைப்படங்கள் ஏதேனும் கதையை தழுவியே எடுக்கப்பட்டு வருகிறது. அது உண்மை கதையாகவோ அல்லது நாவல், கட்டுரை, கவிதை போன்ற புதினங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது.
எழுத்தாக படிப்பதற்கும், படமாக்கப்பட்ட காட்சிகளாக பார்ப்பதற்கும் ரசிகர்கள் எப்போதும் சலித்துக் கொண்டதேயில்லை. அந்த நடைமுறை இதுவரை தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.
ஆனால், சில சினிமா திரைப்படங்கள் கதை திருட்டு, காப்புரிமை போன்ற பல்வேறு திரைக்கதைச் சார்ந்த இன்னல்களையும் சந்தித்து வருகிறது. அதிலும், சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் படங்களே இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறது.
இருப்பினும், பல இளம் இயக்குநர்களும், இயக்கத்தில் கைதேர்ந்த இயக்குநர்களும் தங்களது கற்பனைகளையும், திறமைகளையும் கொட்டி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களை இயக்கியும் அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதற்கும் ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்தவண்ணமே உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் கைதி படம் வெளியாது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்தும், தனது முந்தைய படத்தில் பணிபுரிந்தது, பார்வையாளர்களின் எண்ணஓட்டம் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்துள்ளார்.
அப்போது, படக்கதை திருட்டு, காப்புரிமை போன்ற விவகாரங்கள் குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், "கற்பனைத் திறன் உண்மைத் தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பும் இல்லை. அது தொடர்பாக எண்ணி பயப்படவும் தேவையில்லை."
"திரைக்கதையின் கரு இன்ஸ்பிரேஷன்ஸ் இருக்கலாம். என்னுடைய கைதி படமும் கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி மற்றும் டை ஹார்ட் என்ற ஆங்கில படமும்தான் இன்ஸ்பிரேஷன். ஆனால் கைதிக்கும் அந்த இரு படங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் அந்த இரண்டு படத்துக்கும் கைதி படத்தில் நன்றி தெரிவித்திருப்பேன். மேலும், பார்வையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். ஆதலால் கட்டாயம் காப்புரிமை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்." என லோகேஷ் கூறியுள்ளார்.