ஆயுதம் ஏந்தாது 75 உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரனின் கதை ‘Hacksaw Ridge’. இந்த உலகின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கும்படியான ஒரு நிகழ்வை விட்டுச்செல்லும். அது நல்லவையோ கெட்டவையோ ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் வரும்போது, நம்மை அறியாமலேயே நாம் அன்றைய தினம் நடந்தவற்றை நம் மனதில் ஓட்டிப்பார்ப்போம்.
ஒருவேளை அன்றைய தினத்தில் நாம் பிறக்கவே இல்லை என்றால் அந்த நிகழ்வுகளையெல்லாம் நமக்கு வீட்டில் உள்ள பெரியவர்களோ அல்லது சினிமாவோ சொன்னால்தான் தெரியும். அப்படி சினிமாவின் வாயிலாக நாம் தெரிந்துகொண்ட நிகழ்வுகளில் ஒன்று இரண்டாம் உலகப்போர்.
அன்றைய காலம் பலருக்கு கத்தியின் மீதும் நெருப்பின் மீதும் நடக்கும்படியான வாழ்க்கையாக இருந்தபோதும் அந்தக் காலத்திலும் பலரின் உயிரைக் காப்பாற்றி ‘மெடல் ஆஃப் ஹானர்’ பெற்ற ஒரு மருத்துவரின் கதையை எதார்த்தம் குறையாமல் கொடுத்திருந்த படம் ‘Hacksaw Ridge’. இந்தப் படத்துக்கு மூன்று வயது நிறைவடைந்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லிருந்த நிகழ்வுக்கு வயது 80.
“ப்ரைவேட் டாஸ், ஏன் நீங்க துப்பாக்கிய எடுத்துக்கல?”
“மன்னிக்கணும் சார்ஜன், நான் துப்பாக்கியை தொட மாட்டேன்..!”
இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்த நிலையில் இருந்த அமெரிக்க பயிற்சி முகாமில், ராணுவ வீரர் டாஸ் தனது உயரதிகாரியிடம் சொன்ன வார்த்தைகள் இவை. ‘ஹாக்சா ரிட்ஜ்’ படம் மூலமாக இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்ந்து, போரில் எந்த ஆயுதமும் ஏந்தாமல் 75 பேரின் உயிரைக் காப்பாற்றிய டெஸ்மண்ட் டாஸின் பார்வையில் இரண்டாம் உலகப்போரை சொல்லியிருந்தார் இயக்குநர் மெல் கிப்சன்.
இவரது முந்தைய படங்களான ‘The Man Without a Face’, ‘ Brave heart’, ‘The Passion of the Christ’ மற்றும் ‘Apocalypto’ ஆகிய நான்கு வெற்றிப்படங்களும் ஹாக்சா ரிட்ஜ் படத்திற்கு தொடக்கத்திலேயே எதிர்ப்பார்ப்பை தூண்டியிருந்தது. இந்தியர்கள் மத்தியில் இந்தப் படம் சென்று சேர காரணம் இவரின் ‘பிரேவ் ஹார்ட்’ படம் தான். கமலே இந்த Brave heart படத்தைத்தான் தனது மருதநாயகத்துக்கு முன்மாதிரியாகக் கொண்டிருந்தார். ஆனால், பிரேவ் ஹார்ட்டில் வரலாறை மெல் கிப்சன் இஷ்டத்துக்கும் திரித்திருக்கிறார் என்று இன்னும் அவர் மீது சிலர் வெறியில் இருக்கிறார்கள்.
அபோகலிப்டோ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து Hacksaw Ridge படமூலமாக மீடியா வெளிச்சத்திற்கு வந்தவர் மெல் கிப்சன். சிறுவயதில் தன் சகோதரனை தாக்கியதில் குற்ற உணர்வுக்கு ஆளாகும் டாஸ் அதன் பின் வன்முறையின் மேல் நம்பிக்கையை இழக்கிறான். கூடவே தாயின் பைபிள் போதனைகளும் அன்பை டாஸ் மனதில் ஆழமாக விதைக்கிறது. அந்த நேரத்தில் விபத்தில் சிக்கய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததும் தான் உயிர்களைக் காப்பாற்ற பிறந்தவன் என உறுதியாக நம்பத்துவங்கும் டாஸ், மருத்துவப்படிப்பை முழுமையான ஆர்வத்தோடு படித்து முடிக்கிறார்.
அந்த நேரம் விர்ஜினியாவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி நிலவுகிறது, இன்னொரு பக்கம் இரண்டாம் உலகப்போருக்காக இளைஞர்கள் கொத்துக்கொத்தாக இராணுவத்தில் சேர்கின்றனர். அப்போது டாஸின் சகோதரனும் இராணுவத்தில் சேர, தன் தந்தையின் பேச்சையும் மீறி இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்கிறான் டாஸ். எல்லா பயிற்சிகளையும் தயங்காமல் செய்யும் டாஸ் ஆயுதப்பயிற்சியை மட்டும் மறுக்க அதிகாரிகள் டாஸின் மீது கடுப்பானார்கள்.
"பைபிள்ல உயிர்களைக் காக்கணும்னு சொல்லியிருக்கு, கொல்ல இல்ல", "ஏழாம் நாள் திருச்சபையை நம்பறவன் நான்; சனிக்கிழமை பயிற்சிகளில் கலந்துக்க முடியாது" என கூறும் டாஸின் செயல்பாடுகள் அதிகாரிகளைக் மேலும் கோபமடைய செய்தது.
அன்பாக, கோபமாக, கண்டிப்பாக, அடித்து எனப் பல விதங்களிலும் ஆயுதத்தை டாஸ் கைகளில் கொடுக்க முயல்கிறது இராணுவம். எதுவும் வேலைக்கு ஆகாததால், இராணுவ நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அளவுக்கு மீறி கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ப்ரைவேட் டாஸ், எந்த வித ஆயுதங்களும் இன்றி போருக்குச் செல்லலாம் எனத் தீர்ப்பாகிறது. எந்த ஆயுதமும் இன்றி இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்ளும் டாஸ் தனி ஒருவனாக, அடிபட்ட வீரர்களை உயிருடன் மீட்டு வந்த கதையே ஹாக்சா ரிட்ஜ்.
ரத்தமும் சதையுமாக ஒரு போர், ஆயுதம் ஏந்த மறுக்கும் இராணுவ வீரன், இயக்குநர் மெல்கிப்சனுக்கு, இது புகுந்து விளையாடும் களம். தெறிக்கும் ரத்தமும், உருகுலைந்து சிதறும் உடல்களுமாக இறுதியில் வரும் போர் காட்சியை அதன் கோரத்துடன் அப்படியே படமாக்கியிருந்தார். போர்க்களத்தில் அழுகிப்போய், புழுவைத்துக் கிடக்கும் உடல்களைக் காட்டிய காட்சி ஒன்றே போதும் அதன் தத்ரூபத்தை சொல்ல. சைமன் டக்கனின் ஒளிப்பதிவும் போரின் தீவிரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கும்.
அமேஸிங் ஸ்பைடர் மேன் ஹீரோ Andrew Garfieldதான் டாஸாக நடித்திருந்தார். தன் சக வீரர்களைக் காப்பாற்றச் செல்லும் இடத்தில் எதிரி படையினர் வந்துவிடவே பதுங்கு குழி ஒன்றின் வழியே செல்வார் டாஸ். வழியில் தொங்கிக் கொண்டிருக்க்கும் பிணத்தைப் பார்த்து ஷாக் ஆகும் இவர், அதே குழியில் உயிருக்குப் போராடும் எதிரி நாட்டு வீரனை சமாதானப்படுத்தி அவனுக்கு மருந்து போட்டுவிட்டு தனது வீரனைத் தேடிச் செல்வார். அந்த போர்ஷன் முழுக்க பெர்ஃபாமென்ஸில் வெளுத்திருப்பார் ஆண்ட்ரூ. டெசா பால்மருடனான காதல் காட்சிகளிலும் நடிப்பில் 100% கொடுத்திருப்பார்.
முதல் சிறப்புக்காட்சியில் அரங்கில் இருந்த 3,000 பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டியிருந்த இந்த படத்துக்கு 89வது ஆஸ்கார் விழாவில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த எடிட்டிங் என இரண்டு விருதுகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என மூன்று விருதுகளுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டிருந்தது.
இது போக பல திரைப்பட விழாக்களிலும் பல விருது மேடைகளிலும் இந்தப் படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் தாண்டி இன்றும் இந்தப் படம் பல கோடி ரசிகர்களின் மனதில் நினைவிருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்காவின் ரியல் ஹீரோ டெஸ்ம்ண்ட் டாஸ் தான் முழு முதற்காரணம்.