மகாத்மா காந்தியில் 150வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் கடந்த மாதம் 19ம் தேதி திரைப்பிரபலங்களுடனான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில், இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களே கலந்துகொண்டனர். வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஷாருக்கான், அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி, கங்கனா ரனாவத், சோனம் கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நட்சதிரங்கள் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி காந்தியின் எண்ணங்களும், கொள்கைகளும் சினிமா மூலம் இன்னும் இளைஞர்களுக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், ட்விட்டரில் பாலிவுட் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இருப்பினும், திரை நட்சத்திரங்களுடனான பிரதமரின் சந்திப்பு சர்ச்சைக்குள்ளானது. அது என்னவெனில், தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த மூத்த மற்றும் முன்னணி பிரபலங்களையும் பிரதமரின் காந்தி 150 பிறந்தநா கொண்டாட்ட நிகழ்ச்சியில் அழைக்காதது தான்.
இங்கு சூப்பர் ஸ்டாராக கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன் லால் என பலர் இருக்கையில் அவர்களை அழைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவில் உபாசனா இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு தேர்தல் வரவே இந்த விவகாரம் தட்டிக்கழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஈநாடு நிறுவனத்தின் நிறுவனர் ராமோஜி ராவுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஏனெனில், அவரால்தான் கடந்த அக்.,19ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த காந்தி பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் பங்கேற்க முடிந்தது. அப்போது பிரதமர் இல்லத்திற்குள் நுழையும் போது, எங்களது செல்போன்களை வாங்கிக்கொண்ட செக்யூரிட்டிகள் அதற்கான டோக்கன்களை வழங்கிகனர்.
ஆனால், உள்ளே சென்றபோது, பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதை கண்டு திகைத்து போனேன் என குறிப்பிட்டுவிட்டு, ஹ்ம்ம்ம் என நினைக்க வைத்துள்ளது என தன் ஆதங்கத்தை எஸ்.பி.பி. பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.