மாநகரம் படத்துக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் கைதி.
எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையும், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும் செய்திருந்தார். படத்தில் கார்த்தியுடன் நரேன், ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ரமனா, தீனா என பலர் நடித்திருந்தனர்.
போதைப்பொருள் கும்பலுக்கும், போலிஸாருக்கும் இடையேயான சண்டையில் கார்த்தி சம்மந்தபட்டது எப்படி, இரு தரப்பும் இறுதியில் என்ன ஆகும், போலிஸ்காரர்களை கார்த்தி எப்படி காப்பாற்றுவார் என்பதே கதையின் கரு. ஒரு இரவின் 4 மணிநேரத்திற்குள் நடக்கும் இந்த த்ரில்லிங் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் மக்களை இருக்கையின் முனைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு இருந்துள்ளது.
படம் ரிலீசாக ஒரு வார காலத்திற்குள் பட்டித்தொட்டியெங்கும் ’கைதி’யின் பேச்சுதான் மேலோங்கி இருக்கிறது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கைதி படத்தில் முதல் 8 நாட்களுக்கான வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 50 கோடி ரூபாய் கைதி படம் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் படத்தின் மீதான சுவாரஸ்யமும், கார்த்தியின் அசாத்திய நடிப்பும் மக்களை ஈர்த்துள்ளது படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.