விஜய் - அட்லி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இது நடிகர் விஜய்க்கு 63வது படமாகும். இந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா, அமிர்தா ஐயர் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி இந்த படம் உலகமெங்கும் ரிலீசானது. வெளியான முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை பிகில் படம் ஈட்டியதாக தகவல்கள் கூறப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் படம் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜயின் பிகில் வெளியான முதல் 3 நாட்கள் வார இறுதி மற்றும் பண்டிகை விடுமுறை என்பதால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதின. அதன் பிறகு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்பியதால் திரையரங்குகளில் கணிசமாக கூட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியான ஏழு நாட்களில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கில் பிகிலின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே படம் திரையிடப்படும். ஆனால் பிகில் படத்துக்கு போதுமான கூட்டம் இல்லாததால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசியுள்ள தியேட்டர் நிர்வாகி, “4 ஸ்கிரீன்களில் இரண்டில் பிகில் படம் திரையிடப்பட்டு வந்தது. ஆனால் கூட்டம் இல்லாததால் ஒரு ஸ்கிரீனில் ரத்து செய்துவிட்டோம் என்றும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மற்றொரு ஸ்கிரீனில் படம் திரையிடப்படுகிறது” என்றும் கூறியுள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் இந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தை ஏற்படுத்தியுள்ளது.