1995-ல் வெளிவந்த 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கதாநாயகன் மோஹன்லாலிடம் காதலை மறுத்துவிட்டு போகும் கதாநாயகி ஷோபனா, வயல்களுக்கு நடுவே நடந்து சென்று கொண்டிருப்பார். அப்பொழுது ஷோபனாவின் எண்ண ஓட்டத்தை பார்வையாளன் உணர ஆறேழு விதமான ஆங்கிள்களில் ஷோபனா நடந்து போவதை காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர்.
மிகவும் நுட்பமான ஒளிப்பதிவை தந்த அந்த ஒளிப்பதிவாளருக்கு அதுதான் முதல் படம், அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். அவர்தான் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒளிப்பதிவாளரும்,இயக்குனருமான கே.வி.ஆனந்த்!
பி.சி.ஸ்ரீராம் என்னும் ஆளுமை அவருக்குப்பின் ஒரு படையை தயார் செய்திருந்தது. அதன் முதன்மைத் தளபதி கே.வி.ஆனந்த். காரணம் இவர் தன குருவைப் பின்பற்றியவர் அல்ல. அவரைப்போலவே புதிய புதிய முயற்சிகளை சினிமாவில் செய்தார்.
காதல் தேசம் படம் வெளியானபோது சென்னை என்னும் நகரத்தை இத்தனை தொலைநோக்கோடு படம் பிடித்திருக்கிறாரே என விமர்சகர்கள் கே.வி.ஆனந்த்தைக் கொண்டாடினர்.
முதல்வன் படத்தின் பிரம்மாண்டம் கே.வி.ஆனந்தின் கைவண்ணம்தான். அந்த பிரம்மாண்டமே இயக்குனர் ஷங்கர் என்பவருக்கான அடையாளமானது. பின்னர் அது ஹிந்தியில் நாயக், தமிழில் பாய்ஸ், சிவாஜி வரை தொடர்ந்தது.
இப்படியான ஷங்கருடனான பயணம் ஏற்படுத்திய தாக்கம் கே.வி.ஆனந்தின் இயக்கும் படங்களில் வெளிப்படுகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. அது ஆரோக்கியமானது என்பதால் தான் இயக்குனர் கே.வி.ஆனந்தும் கொண்டாடப்படுகிறார்.
இவர் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியாகிய அயன் தமிழ் சினிமாவின் நவீனயுகத்திற்கான மிகச் சிறந்த திரைக்கதை ஆக்கம். பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தாலும் தன் திரைக்கதை திறமையாலேயே மிகப்பெரும் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார்.
அயன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவை வைத்து கோ படத்தை இயக்கினார். ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் முன் ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தமிழின் மிக முக்கியமான அத்தனை இதழ்களையும் தன் புகைப்படங்களால் அலங்கரித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அதுதான் கோ படத்தின் அந்த கதாநாயகன் பாத்திரம் அத்தனை நேர்த்தியாக வருவதற்குக் காரணம்.
இதற்குப்பின்னும் கூட கே.வி.ஆனந்த் தான் இயக்கிய மாற்றான், அனேகன், கவண் மற்றும் சமீபத்தில் வெளியான காப்பான் வரை சமூகத்தின் மிக முக்கியமான ஏதாவது ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைத்தே தன் படங்களை செய்தாலும் அதற்குள் இருக்கும் திரைக்கதை உத்தி எப்போதும் வியக்கவைக்கிறது.
கே.வி.ஆனந்த் தன் பள்ளி வயதில் அப்பாவிடமிருந்து ஒரு கேமராவை பரிசாக பெற்றுக்கொண்டபோது இப்படி கூறியதாக ஒரு நாளிதழில் பகிர்ந்துகொண்டார். இது நம் எல்லோருக்குமான பாடமாக இருக்குமென்று நம்புகிறேன். "இப்போ நீ லெவன்த் படிக்கிறே. உனக்கு கேமராவுல ஆர்வம் இருக்குனு வாங்கிக்கொடுத்தேன்.
என்னுடைய பாராட்டு முக்கியமில்ல. உன்னை நீயே பாராட்டிக்கிற மாதிரி, எதைச் செய்தாலும் செய். உனக்குப் பிடிச்சுப்போய் நீ எதைச் செய்தாலும் அது உனக்கு வலியாவோ சுமையாவோ இருக்காது. உனக்கு எது சந்தோஷமா இருக்கோ அதுதான் உன் தொழில்."