விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ள ‘பிகில்’ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் (அக்.,25) திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இதற்கிடையே ‘பிகில்’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி திரைப்பட உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் காப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வாவின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பிகில் படம் ரிலீஸுக்கு முன்பே 200 கோடியை தாண்டி வர்த்தகமாகியுள்ளது. படம் ரிலீஸாவதையொட்டி டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து வருகிறது.
குறிப்பாக சிறப்பு காட்சி டிக்கெட்டுகளை விஜய் ரசிகர்கள் போட்டிபோட்டு வாங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் சிறப்பு காட்சி திரையிடல் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தையின் மூலம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தாலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வசூலித்ததை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘பிகில்’ படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி படத் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.