விஜய் நடிப்பில் அவரது 63வது படமாக உருவாகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது 'பிகில்'. அட்லீயுடன் 3வது முறையாக இணைந்துள்ள விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ளார்.
நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி பிகில் படம் வெளியாகவுள்ள சமயத்தில் படத்துக்கு பல வகையில் சிக்கல்கள் வலுத்து வருகிறது.
ஏற்கெனவே கதைத் திருட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பிகில் மட்டுமில்லாது எந்தப் படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பால், படம் வெளியாகும் 25ம் தேதி முதல் 3 காட்சிகளுக்கான வசூலில் இழப்பு ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், சிறப்பு காட்சிக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஏனெனில், சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்ததை விட அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் சிறப்பு காட்சியை ரத்து செய்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். பல இடங்களில் 1000 முதல் 2000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தீபாவளிக்குப் பிறகு விடுமுறை நாட்கள் இல்லாததால் 25ம் தேதியே படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்தது. அதன்படி ரிலீசுக்கு முன்பே பிகில் படம் வியாபார ரீதியில் விற்கப்பட்டுவிட்டது.
தற்போது தீபாவளிக்கு பிறகு விடுமுறை இல்லாததால் கூடியவரை முதல் 3 நாட்களில் வசூலை ஈட்ட தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அறிவிப்பால் வசூல் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குமுறுகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அரசுடன் சினிமா விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
இதற்கு பிறகே முடிவு தெரியவரும். மேலும், எத்தனை மணிக்கு திரையிடுதல் மற்றும் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடனேயே சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
வழக்கமாக நடிகர் விஜயின் படங்கள் ரிலீஸ் ஆவதில் அரசியல் சிக்கல்கள் இருக்கும். அவரது நடிப்பில் வெளியான தலைவா, தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அதேபோல், பிகில் திரைப்படமும் சிக்கலில் சிக்கி இருப்பதால், விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.