விஜயின் 63வது படமாக உருவாகியுள்ள பிகில், வருகிற அக்., 25ம் தேதி ரிலீசாகவுள்ளது. அட்லியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்த விஜய்க்கு இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.
ரிலீசுக்கு தயாராகியுள்ள பிகில் படத்துக்கு எதிராக ஏற்கெனவே கதை திருட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது, பிகில் பட ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் விஜய் கூறிய குட்டிக்கதைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதில், “பூக்கடையில் வேலை செய்றவன பட்டாசுக் கடையில் வேலைக்கு வச்சா, அவன் அந்த பட்டாசு மேல தண்ணீ தெளிச்சு வியாபாரத்தையே கெடுத்துடுவான்” என்று விஜய் பேசியிருப்பார்.
விஜயின் இந்த பேச்சு பூக்கடைத் தொழிலாளர்களை அவமதித்துள்ளதாகவும், அவர்களை ஒருமையில் பேசியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பூக்கடைத் தொழிலாளர்கள் சங்கம்.
இது தொடர்பாக பேசியுள்ள அச்சங்கத்தின் செயலாளர் படையப்பா ரெங்கராஜ், ”தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 1 லட்சத்துக்கும் மேலானோர் பூத்தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தரைக்குறைவாக விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதற்காக நடிகர் விஜய் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என எச்சரித்துள்ளார்.
முன்னதாக, பிகில் பட போஸ்டர் ஒன்றில் கறி வெட்டும் கட்டயின் மீது விஜய் காலை வைத்திருப்பது எங்களையும், எங்கள் தொழிலையும் அவமதிக்கும் விதமாக உள்ளது எனக் கூறி இறைச்சிக் கடை வைத்திருப்போர் பிகில் போஸ்டரை கிழித்தெறிந்தனர். தற்போது பூத்தொழில் பிரச்னை வந்துள்ளதால் பிகில் படத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.