தமிழில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்திருந்த இப்படத்தை பிரேம் குமார் இயக்கியிருந்தார்.
பள்ளிப்பருவ காதல் மற்றும் நட்பை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்ததால் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 96 படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது.
ராம், ஜானு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அவர்கள் அணிந்திருந்த உடைகள் கூட ட்ரெண்டானது. அது மட்டுமின்றி த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களின் இதயங்களைக் களவாடியிருந்தனர்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘96’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதில், கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் பாவனா ஆகியோர் நடித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்காகிறது. அதன்படி ஜானு கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத் தமிழில் இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது எனக்கு மற்றொரு ஸ்பெஷல் படம் . முன்பு இருந்ததை விட என்னைச் சிறந்தவளாக மாற்றிய சவாலான கேரக்டர் இது. இந்த ஜானு கனவு குழுவில் அங்கமாக இருந்த இயக்குநர் பிரேம் மற்றும் ஷர்வானந்திற்கு மிக்க நன்றி’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்தப் பதிவை கண்டு குஷியடைந்த சமந்தா ரசிகர்கள், 'ஜானுவாக உங்களைப் பார்ப்பதற்கு மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்' என்று கமென்ட் செய்துள்ளனர்.
தமிழில் வெளியான ‘96’ படத்தில் திரிஷாவை ஜானுவாக பார்த்த தமிழ் ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். சமந்தாவை தெலுங்கில் ஜானுவாக பார்க்க விரும்பும் தெலுங்கு ரசிகர்களின் நெஞ்சங்களில் சமந்தா குடியேறுவாரா என்பது படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும்.