இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களின் பிடித்தமான பிரபலமாகவே திகழ்ந்து வருகிறார்.
அதற்கேற்றாற்போல அவரது ட்விட்டர் பதிவுகளும் தமிழை, தமிழர்களை மையப்படுத்தியே இருப்பதால் நாளுக்கு நாள் தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தின் மத்தியில் ஹர்பஜன் சென்சுரி அடித்துக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில், சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களுக்கான புரோமோஷன் பதிவுகளை தனது ட்விட்டர் வாயிலாக பதிவிட்டு வந்த ஹர்பஜன் சிங் நேரடியாக திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக வலம் வந்த நடிகர் சந்தானம் ஹீரோவாக அப்டேட் ஆகி அதிலும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் சந்தானம்.
சந்தானத்தின் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் ஹர்பஜன் சிங். இது தொடர்பாக அவர் சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா படக்குழு, சந்தானம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கிரிக்கெட் வீரராக இருந்து வந்த ஹர்பஜன் தமிழ் சினிமாவின் மூலம் நடிகராக களம் காணவுள்ள அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.