நடிகர் சூர்யாவின் 37வது படமாக உருவாகி ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது ’காப்பான்’. இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் காப்பான் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகை சாயிஷா, நடிகர்கள் சமுத்திரகனி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது, “என்னுடைய ரசிகர்கள், தம்பி, தங்கைகள் அனைவருக்கும் ஒரு உறுதியான வேண்டுகோளை முன்வைத்துக் கொள்கிறேன். இதனை அதிக முறை அறிவுறுத்தியிருந்தாலும், கைமீறி சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இனி யாரும் படம் ரிலீஸாகும்போது பேனர், கட் அவுட் வைத்து கொண்டாட வேண்டாம். சமீபத்தில் நடந்த துயர சம்பவம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது” என பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயை மேற்கோள் காட்டி நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரத்த தானம் போன்ற பல நல்ல விஷயங்களை எனது ரசிகர்கள் செய்து வருகிறீர்கள். அதனுடன் இதனையும் சேர்த்து செய்யுங்கள் நம்ம மக்களுக்காகவும், நம் சமூகத்துக்காகவும் செய்யுங்கள்” என அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
“படம் வெளிவரும்போது, சாமானிய மக்களுக்கு உதவுவதன் மூலம் உங்களுடைய சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்துங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள். பேனர் வைத்து என்னைக் கொண்டாட வேண்டாம். தயவுசெய்து இனி பேனர் வைக்காதீங்க” என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.