2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையின் போது சிவா இயக்கத்தில் வெளியான படம் அஜித்தின் விஸ்வாசம். இதில், நயன்தாரா, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா என பலர் நடித்திருந்தனர். குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்த இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்ததை வாங்கி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்.
விஸ்வாசம் படத்தோடு ரஜினியின் பேட்ட படமும் ரிலீசான போதும், இரண்டும் படங்களும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் படம் வெளியான சமயத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தனர்.
இவ்வாறு இருக்கையில், பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து பேசியுள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் விஸ்வாசம் படத்துக்கு வசூலானத் தொகை வெறும் 80 கோடி என்றும், ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே 125 கோடி ரூபாய் வசூல் என ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ள வீடியோ காட்சி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, விஸ்வாசம் பட வசூல் குறித்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அதில், பொங்கலுக்கு வெளியிடப்பட்டு தீபாவளி வரை விஸ்வாசம் படம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் படத்தின் சாதனையை மறைத்துவிடவோ, மறந்துவிடவோ முடியாது என குறிப்பிட்டு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விஸ்வாசம் தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், #தலநாடுதமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும், #ViswasamFakeBOExposed என்ற ஹேஷ்டேக் விஜய் ரசிகர்களாலும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.