தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்கள் கபடி குழு ஒன்றை இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்குபெற வைக்கிறார்கள் பயிற்சியாளர்களான சசிகுமாரும், பாரதிராஜாவும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை.
கபடியை மையமாக வைத்து தன் மூன்றாவது கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். கபடியை அந்த அளவிற்கு காதலிக்கிறார் சுசீந்திரன். ஆனால் இந்த உணர்வை படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் நம்மால் அந்தப் படத்தை ரசிக்க முடியும். அதற்கான எந்த முயற்சியையும் படம் எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையாகவே படத்தில் ஒரு கபடி போட்டிகூட முழுமையாக காட்சிப்படுத்தப் படவில்லை. இதுவே படத்தின் பெரிய மைனஸ்.
இது அத்தனை பெரிய விஷயமா, கபடி போட்டியை நாம் பார்த்ததே இல்லையா என்றால், வெறும் கபடியை மட்டுமே முன்வைத்து எடுக்கப்படும் படம் ஒன்றில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி விளையாடுகிறது? அந்த கதாபாத்திரத்தின் தன்மை என்ன? இப்படியான விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளுதலே படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். இது நடக்காமல் போனது பெரிய நீளமில்லாத இந்தப் படத்தையே பெரும் அலுப்புக்குரியதாக மாற்றிவிட்டது.
சசிகுமார், பாரதிராஜா இருவர் மட்டுமே நமக்கு நன்கு அறிந்த முகங்கள். இவர்கள் இருவருமே நன்றாக நடித்த பல முன்னுதாரணங்கள் இங்கு இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் இவர்களின் நடிப்பு நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை. இவர்கள் தவிர்த்து 7,8 பெண்கள் கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு நெஞ்சைப் பிழியவைக்கும் கண்ணீர்க்கதை (அல்லது அப்படி அவர் நினைக்கும்) ஒன்றை பின்புலமாக வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவும் படத்தில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை. எனில் யாரை ஏமாற்ற அந்தக் கதைகள்?
கபடியை இத்தனை காதலித்து படம் இயக்குகிறீர்கள். தேர்வுக்குழுவில் இருக்கும் ஒருவர் பணம் வாங்கிக்கொண்டு வீரர்களைத் தேர்வு செய்கிறார் என்பதுதான் கபடி விளையாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினையா? ஒரு கதையை எழுதுவதற்கு முன் எத்தனை ஆய்வு செய்திருப்பீர்கள். அதில் நீங்கள் கண்டுபிடித்தது இதுதானா?
இந்த அனைத்தையும் விட படம் முழுக்க தேவையே இல்லாமல் தேசப்பற்று என்ற ஒன்றை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அது நம்மை படத்துடன் ஒன்றவைப்பதற்குப் பதிலாக கதைக்கு வெளியே நம்மைத் துரத்துகிறது. இன்னும் உச்சமாக கபடி தேர்வுக்குழு தலைவர் செய்யும் ஊழலை தேசத்துரோகம் என வகைப்படுத்துகிறார். மொத்தத்தில், ‘கென்னடி கிளப்’ டெம்ப்ளேட்களால் உருவாக்கப்பட்ட டெம்ப்ளேட் படம். அவ்வளவே!