1. உறுதியானது காப்பான் ரிலீஸ்
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் வெளியான அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரகனி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
சூர்யா சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம், செப்டம்பருக்கு தள்ளிப்போய் உள்ளது. இந்த மாதம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் பிரபாஸின் சாஹோ என இரண்டு முக்கிய படங்கள் வெளியாவதால் காப்பான் படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது. அதுப்படி காப்பான் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90வது படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் 'களத்தில் சந்திப்போம்' என வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை என்.ராஜசேகர் இயக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜீவா தற்போது கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3. ‘100% காதல்’ படத்தின் அடுத்த அப்டேட்!
இந்த ஆண்டு 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் நான்கு திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியாக தயார் நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்று '100% காதல்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடெக்சன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் சரியான ரிலீஸ் தேதியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் '100% காதல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, சதீஷ், யோகி பாபு, நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எம்.எம்.சந்திரமெளலி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் '100% லவ்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
4. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
‘ஈ மாயா பிரேமிட்டோ’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தெலுங்கு இளைஞர்களின் மனங்களை கொள்ளை அடித்தவர் காவ்யா தபார். தற்போது தமிழில் ‛மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து, மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரஷாந்த் நடித்த ஜாம்பவான், அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை, சசிகுமார் - நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ‛ராஜ வம்சம்’ ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து டி.டி.ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். ‘தெகிடி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
5. பாலிவுட்டில் விக்ரம் வேதா ரீமேக் உறுதி!
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கும் இந்தப் படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவும், டாக்டர் ராஜசேகரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன.
ஆனால், அந்த தகவல்கள் உண்மையில்லை என, விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனம் மறுத்துள்ளது. உறுதிப்படுத்திருக்காங்க. விக்ரம் வேதா படம் ரீமேக் பற்றிய எந்த தகவலும் உண்மையில்லை எனவும் வதந்திகளை நம்பி ரசிகர்கள் குழம்ப வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தியிருந்தனர்.
தற்போது இந்தப் படத்தின் பாலிவுட் ரீமேக் பற்றிய தகவல் ஒன்று பரவி வருகிறது. பாலிவுட் ரீமேக்கில் அமீர்கானும், சயீஃப் அலிகானும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இந்தி ரீமேக்கையும் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கவிருக்கிறார்களாம்.