இயக்கம் : மாரிமுத்து
நடிகர்கள் : ஷமன் மித்ரு, சத்யகலா
இசை : வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் ரோஷன்
ஒளிப்பதிவு : குமார் ஸ்ரீதர்
எடிட்டிங் : ராஜா முகமத்
வயல்களில் கிடை போடும் குடும்பத்து நாயகன், தவறான நட்பால் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை.
இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் பார்த்துவிட்டு இந்தப் படத்தில் ஏதோ இருக்கிறது எனத் தோன்றியது. அந்த நம்பிக்கையில் அதே நேரத்தில் ஒரு சிறிய பட்ஜெட் முயற்சியைத்தான் பார்க்கப் போகிறோம் என்று மனதைத் தயார்செய்துகொண்டு படத்திற்குச் சென்றேன். இராமநாதபுரம் பகுதிகளில் வயல்வெளிகளில் கிடை* போடும் கீதாரி குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். (*வயலில் அறுவடை முடிந்தபின், அடுத்த அறுவடைக்கு முன்னதாக நிறைய ஆடுகளை வயலிலேயே கூடாரம் இட்டுத் தங்கவைப்பர். ஆடுகளின் கழிவுகள் வயலுக்கு உரமாவதற்கான ஏற்பாடு)
கீதாரிகளின் வாழ்வியல் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும், ஒரு பெரும் நாடோடிக்கான சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதை சினிமாவில் பதிவு செய்வது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஆனால் சினிமா என்பது ஆவணப்படம் இல்லையே. இங்கு பதிவு செய்வதோடு ரசிகனை கொண்டாட வைக்கும் கதையும், திரைக்கதையும் தேவைப்படும். பதிவு செய்வதில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் 'தொரட்டி' கதை, திரைக்கதையில் பெரிதாகச் சாதிக்கவில்லை.
பொதுவாக இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்களில் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்காது, டப்பிங் சரியில்லாமல், பின்னணி இசை தொந்தரவு செய்வது போன்ற ஏராளமான தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கும். ஆனால் 'தொரட்டி' தொழில்நுட்பரீதியாக மிகவும் நன்றாகவே இருக்கிறது. எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வித்தியாசமான கதை, நல்ல திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் பெரும் வெற்றிபெறக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு புதிதான ஒரு சமூகத்தின் வாழ்வியலை பதிவு செய்கிறோம் என்றால், அதன் பொறுப்புணர்ந்து வரலாற்று ரீதியான சரியான தகவல்களை தரவேண்டும். அதை இயக்குனர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு, கதையை இராமநாதபுரத்தில் இருந்து தொடங்குவது.
கீதாரிகள் காவல் இருக்கும்போது நின்றுகொண்டே தூங்குவது, தொரட்டியை மணப்பையனாக வைத்து திருமணம் செய்வது போன்ற அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸ்யங்களை வெகுஜனத்திடம் கொண்டுவந்து சேர்த்ததற்கு வாழ்த்துகள். இவை அனைத்தும் சேரும் சரியான ஒரு புள்ளியைக் கண்டுபிடித்து அதிலிருந்து ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் தமிழ் சினிமா மற்றுமொரு நல்ல சினிமாவைக் கண்டிருக்கும்.
நடிகர்கள் அனைவருமே கதைக்குத் தேவையான நடிப்பை சிறப்பாகவே தந்திருந்தார்கள். முக்கியமாக கதாநாயகியாக நடித்திருக்கும் சத்யகலா தனியாக குறிப்பிட்டுப் பாராட்டவேண்டியவர். அந்தக் கண்கள், நிறம், உடல்வாகு, நடிப்பு என அனைத்தும் இனி தமிழ் மண்ணை முன்னிறுத்தும் எந்தக் கதைக்கும் இவர் பொருந்திப்போவார் என்றே எண்ணவைக்கிறது. அவர்மீது தமிழ் சினிமா தன் வெளிச்சத்தை பாய்ச்சி தனக்கான ஒரு கதாநாயகியை கண்டெடுத்துக்கொள்ளும் என்றே நம்புவோமாக!
மொத்தத்தில், இது ஒன்றும் ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை. ஆனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தந்து இந்த குழுவை தொடர்ந்து படங்கள் தரச் செய்வது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதாக அமையும்.