இயக்கம் : கல்யாண்
நடிகர்கள் : ஜோதிகா, ரேவதி, ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : ஆனந்த்குமார்
எடிட்டிங் : விஜய் வேலுக்குட்டி
புராண கால கதைகளில் நாம் கேள்விப்பட்ட 'அட்சயபாத்திர’த்தைத் தேடி பயணிக்கின்றனர் ஜோதிகாவும் ரேவதியும். அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும், நிகழ்வுகளுமே படத்தின் கதை.
'குலேபகாவலி' திரைப்படத்தின் இயக்குனர் கல்யாணின் அடுத்த படம் இது. அதனால்தானோ என்னவோ அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் போலவே இருக்கிறது ஜாக்பாட். (இந்த படத்திலும் பிரபுதேவா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என அடிக்கடி தோன்றியது) இயக்குனரின் இரண்டு படங்களையும் வைத்துப் பார்க்கும்போது ஃபேன்டஸியான காமெடி கதைகள் தான் இவருக்கான ஜானர் போல எனத் தோன்றினாலும் அதில் அவர் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை என்பதையும் சொல்லியாகவேண்டிருக்கிறது. ஆனால் இரண்டு படங்களிலுமே காமெடி டிராக் நன்றாகவே இருந்தது. எனவே இயக்குனர் வேறு ஐடியாக்களை யோசிக்கலாம்.
தன் இரண்டாவது இன்னிங்ஸில் சமூக கருத்துகளை பாடமாக எடுக்கும் படங்களாக செய்துகொண்டிருந்த ஜோதிகா, இந்தப் படத்தில் தமிழ் சினிமாவுக்கானதாக சொல்லப்படும் பக்கா கமர்ஷியல் ஹீரோயிச ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதே பெரிய வெற்றிதான் என்றாலும், ஹீரோயிசம் என்றாலே பத்துப் பேரை அடிப்பதும், ஸ்லோமோஷனில் நடத்துவருவதும் தான் என்று எண்ணுவது சரியா?
படம் ஜோதிகாவையும், ரேவதியையும் சுற்றியே நடக்கிறது என்றாலும்கூட படம் முடிந்து வெளியேவரும் அடுத்த நொடியே இருவரும் நினைவில் இருந்து மறைந்துவிடுகிறார்கள். ஆனாலும் படம் ரசிக்கும் அளவிற்கு இருப்பதற்கு காரணம் ஆனந்தராஜ் மற்றும் அவருடன் வரும் கிங்ஸ்லீ, தங்கதுரை போன்றவர்கள்தான். ஆனந்தராஜின் பெண் வேடம் அத்தனை நகைச்சுவையாக இல்லையென்றாலும்கூட இரண்டு வேடங்களிலும் அடித்து ஆடியிருக்கிறார். அவர் தன் படையோடு வரும் அத்தனை காட்சிகளிலும் காமெடி ஒர்க்-அவுட் ஆகிறது. "நான் ரொம்ப அவசரமா போறேன், அதனால இது லுங்கியாவே இருக்கட்டும்" என்ற பாணியிலான வசனங்களை ரசித்து சிரிக்கலாம்.
சமீபத்தில் வெளியாகும் எல்லா படங்களையும் போலவே இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார். ஆனால் மற்ற படங்களில் இருப்பதுபோல் உருவ கேலி வசனங்கள் இல்லாமல், படத்தில் இவர் கதாபாத்திர வடிவமைப்பே உருவகேலி தான். இதை தான் நடிக்கும் எல்லா படங்களிலும் தொடர்ந்து அனுமதிக்கிறார் யோகிபாபு. அவருக்கு இதில் பிரச்னை இல்லையென்றாலும்கூட உருவகேலியால் பாதிக்கப்படும் அனைவருக்குமே எதிரானது இது. எனவே நியாயமான கண்டனங்களை தெரிவிக்கவேண்டியது கடமையாகிறது.
படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஜில் ஜங் ஜக், சிம்பா போன்ற படங்களில் அட்டகாசமான பின்னணி இசையையும், ஆல்பத்தையும் கொடுத்தவர் இந்தப் படத்தில் கவனிக்கவைக்கும் அளவிற்குக்கூட இசை அமைக்கவில்லை. (அந்த 'ஸ்கெட்ச்' பட பின்னணி இசையை ஜாக்பாட்டில் அடிக்கடி கேட்கமுடிந்தது. இந்த படம் ஸ்கெட்ச் அளவிற்குத்தான் இருக்கிறது என்பதற்கான குறியீடு என நினைக்கிறேன்)
மொத்தத்தில், இந்த வாரம் நான் ஏதாவது ஒரு படத்திற்கு போய்த்தான் ஆகவேண்டும் என உறுதியாக இருந்தால் இந்தப் படத்திற்குப் போகலாம். இரண்டரை மணிநேரம் எதையும் யோசிக்காமல் சிரித்து மகிழ்வீர்கள்.