சினிமா

“துணை நடிகர்களில் ஒரு சூப்பர் ஸ்டார்” : டெல்லி கணேஷ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

குணச்சித்திர நடிப்போ, வில்லன் கதாபாத்திரமோ, காமெடியோ, படு சீரியஸான கேரக்டரோ எந்த கேரக்டர் என்றாலும் அதற்கு உயிர்கொடுத்து நடிப்பவர் டெல்லி கணேஷ். அவருக்கு இன்று பிறந்தநாள்.

“துணை நடிகர்களில் ஒரு சூப்பர் ஸ்டார்” : டெல்லி கணேஷ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திறமையிருந்தால் நல்ல நடிகனாகிவிடலாம்; ஆனால், ஒரு நடிகன் கலைஞனாவது என்பது அத்தனை சுலபமல்ல. திறமையைத் தாண்டிய ஒரு உழைப்பும், உயிர்ப்பும் நடிப்பின் மேல் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அப்படியான ஒரு கலைஞன் டெல்லி கணேஷ். குணச்சித்திர நடிப்போ, வில்லன் கதாபாத்திரமோ, காமெடியோ, படு சீரியஸான கேரக்டரோ எந்த கேரக்டர் என்றாலும் அதற்கு உயிர்கொடுத்து நடிப்பவர் டெல்லி கணேஷ். அவருக்கு இன்று பிறந்தநாள்.

திரைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்றும் நடிப்பால் தனக்கென தனி இடத்தைக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், நிச்சயம் சினிமாவில் ஒரு பாடப்புத்தகம். ஹீரோவாக திரைப்பயணத்தைத் தொடங்கும் நடிகர்கள், அந்த காலகட்டத்தில் மட்டுமே ஜொலிக்க முடியும். வில்லனாக ஒருவர் ஹிட் கொடுத்தால் இன்னும் சில படங்களில் வில்லனாக இருக்கலாம். அதன்பிறகு டிரெண்ட் மாறிவிடும். சினிமாவுக்கு புதிய வில்லன்கள் கிடைத்துவிடுவார்கள்.

சினிமாவில் இருக்கும் மற்றுமொரு சவால் என்னவென்றால், முதல் இரண்டு, மூன்று படங்களில் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரமே அவர்களுக்கான கேரக்டராக முத்திரை குத்தப்படும். இப்படியான எந்த சுழலுக்குள்ளும் சிக்காமல் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதும், ஏற்கும் கதாபாத்திரத்தில் பொருந்திப்போவதும், நினைவுகூரும் நடிப்பைத் தரும் கலைஞனாகவும் இருந்ததே டெல்லி கணேஷின் தனித்துவம்.

“துணை நடிகர்களில் ஒரு சூப்பர் ஸ்டார்” : டெல்லி கணேஷ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

பத்து வருடங்கள் விமானத்துறையில் பணியாற்றியவருக்கு, திரை மீதும் நடிப்பு மீதும் கொண்ட ஈர்ப்புதான், இயக்குநர் கே.பாலசந்தர் கண்முன் அவரை நிறுத்தியது. ராணுவத்தை கைவிட்டாலும், மிலிட்டரி ஒழுக்கத்தை இப்போதும் கடைபிடிப்பவர். முதல் படம் 1976ல் வெளியான பட்டினப் பிரவேசம். அதன்பிறகு, குருநாதர் கே.பாலசந்தரின் படங்களில் தொடர் வாய்ப்பு அவரை நடிகராக திரைத்துறையில் மிளிரசெய்தது.

சின்னச்சின்ன கதாபாத்திரம் என்றாலும் அதில் தனித்துத் தெரிய வேண்டியது அவசியம். இல்லையென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள். அன்றைய காலகட்டத்தில் சேதுபதி, டி.பாலசுப்பிரமணியம், கே.டி.சந்தானம் உள்ளிட்டோரின் நடிப்பு இதற்கு உதாரணம். அந்த வரிசையில் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் டெல்லி கணேஷ். நாயகனாக 1981ல் எங்கம்மா மகாராணி படத்தில் நடிக்கிறார். 70களின் அழகிய நடிகைகளான சுஜாதா, சுமித்ரா உள்ளிட்டோர் இவருக்கு ஜோடியாக நடித்தனர்.

“துணை நடிகர்களில் ஒரு சூப்பர் ஸ்டார்” : டெல்லி கணேஷ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

எல்லா கேரக்டரிலும் டெல்லி இணைந்து போவதற்கு முக்கிய காரணம் அவரின் நகைச்சுவையும்தான். நாடகத்தில் துவங்கியவர், திரைத்துறையில் 600க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார். கே.பாலசந்தரைப் போலவே, கமல்ஹாசனும் டெல்லிகணேஷை அதிகமாக படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். தெனாலி, மைக்கேல் மதன கமராஜன், அவ்வை சண்முகி படங்கள் சான்று.

தெனாலி படத்திற்காக கொடைக்கானல் ஏரியில் ஒரு சீன். இவரும் ரமேஷ் கண்ணாவும் கடும் குளிரில் ஏரியில் டூப் இல்லாமல் ஒரே டேக்கில் அந்த ஷாட்டை ஓகே செய்திருப்பார்கள். அதுபோல மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் வேலுநாயக்கரின் நம்பிக்கைக்குரிய ஐயர் கேரக்டராகட்டும், இருவர் படத்தில் நம்பி கதாபாத்திரமாகட்டும் ஒவ்வொன்றுமே மனதில் நிற்கும் பாத்திரங்கள். அந்த இரண்டு கேரக்டருக்குமே பெரியதாக எந்த வசனமும் கிடையாது. முகபாவங்களிலேயே அர்த்தங்களை கடத்தியிருப்பார். மணிரத்னத்துடனான அந்த நட்பு, காற்று வெளியிடை வரை நீண்டது தான் அதன் அற்புதமே. ஏர்ஃபோர்ஸில் பணியாற்றியவரை, படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவைத்திருப்பார் மணிரத்னம்.

“துணை நடிகர்களில் ஒரு சூப்பர் ஸ்டார்” : டெல்லி கணேஷ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

நடிகனாக டெல்லி கணேஷ் அவர்களை நினைவுபடுத்த சரியான சான்று சிந்து பைரவி படம் தான். மிருதங்கம் வாசிக்கத் தெரிந்த ஒருவரையே அந்த கதாபாத்திரத்தில் பொருத்த எண்ணியிருந்தார் கே.பி. ஆனால், மிருதங்கம் தெரியாத கணேஷ் அந்த கேரக்டரில் வாழ்ந்திருப்பார். அதற்கு இளையராஜாவின் இசை இன்னும் உயிரூட்டியிருக்கும். அதற்கு குடி போதையில் மிருதங்கத்தை வாசித்துக்கொண்டே வசனம் பேசும் டெல்லியின் ஒற்றை நடிப்பே உதாரணம். அதுபோல, மற்றொரு நடிகருக்குப் பதில் எதேச்சையாக தமிழன் படத்தில் விஜய்யுடன் காமெடி டிராக்கில் நடிக்க வருகிறார் டெல்லி. ‘அந்த சிகரெட்டை நிறுத்து..’ காமெடி, பல இடங்களில் மீம் டெம்ப்ளேட்டாக மாறிவிட்டது.

40 வருடங்களுக்கும் மேலாக நடிகனாக திரைத்துறையில் நிலைத்திருப்பதெல்லாம் சுலபமில்லை. டிரெண்டுக்கு ஏற்றது போல ஓடவில்லையென்றால் நிச்சயம் ரன் அவுட் ஆகிவிடவேண்டியது தான். இதை உடைத்தெறிந்த வாலியைப் போல, இவரையும் சொல்லலாம். நாடகம், சினிமா, பிறகு டிவி-யில் நடித்தவர் யூடியூப்பிலும் வந்தார். இளம் தலைமுறையினர் விரும்பினால், அவர்களின் குறும்படத்திலோ, யூடியூப் வீடியோக்களிலோ கூட எளிதில் நடிக்கவைத்துவிடலாம். எந்த சம்பளமும் எதிர்பாராமல், நடித்துக் கொடுக்கும் மனமே டெல்லியின் உயரத்திற்கு காரணம். நடிகனாகவும், நல்ல மனிதராகவும் நிச்சயம் கொண்டாடப்படக்கூடியவர் தான். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டெல்லி கணேஷ் சார்.

banner

Related Stories

Related Stories