தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகன், எல்லா விதமான ரசிகர்களுக்கும் பிடித்தமானவராக, தான் நடித்த சரிபாதிப் படங்களை பிளாக்பஸ்டராக மாற்றிய, எந்த கதாபாத்திரங்களுக்கும் பொருந்திப்போகும், சமூக அக்கறையுள்ள பல விஷயங்களை பொதுவெளியில் தொடர்ந்து செய்பவராக ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் இன்று பிறந்தநாள் கொண்டாடும் 'சூர்யா'.
ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற அறிமுகம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒரு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக ஒரு வருடம் வேலை செய்திருக்கிறார். இந்த எண்ணம்தான் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பொதுவெளியில் வந்து தன் கருத்தைப் பதிவு செய்யும் சமூக ஒழுக்கத்தை அவருக்குத் தந்திருக்கிறது.
ஒரு நடிகராக 1977-ல் 'நேருக்கு நேர்' படத்திலேயே அறிமுகமாகி, ‘ஃப்ரெண்ட்ஸ்’ போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் பாலாவின் 'நந்தா' சூர்யாவிற்கு ஒரு பெரிய அங்கீகாரத்தைத் தந்தது. தொடர்ந்து இயக்குனர் விக்ரமனின் 'உன்னை நினைத்து' சூர்யாவின் இன்றுவரையிலான ஃபேமிலி ஆடியன்ஸிற்கான ஆதாரம்.
2002-ல் வெளியான இயக்குனர் அமீரின் 'மௌனம் பேசியதே' சூர்யாவிற்கென ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கிய புள்ளி. ஒரு கேரக்டராகவே 'கௌதம்' என்ற அந்த கேரக்டர் இன்றுவரைக்கும் பலரின் ஆதர்சம்.
இந்த ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைக்க ஒரு நல்ல ஆக்ஷன் படம் தேவைப்பட்டபோதுதான் 2003-லேயே இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து 'காக்க காக்க' திரைப்படத்தைத் தந்தார். இது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுத் தந்தது. காரணம், வெறும் ஆக்ஷன் மட்டுமல்லால் ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லா விதத்திலும் ரசிகர்களை கொண்டாடவைத்தது. பின்னாட்களில் மீண்டும் கௌதம் மேனன் தந்த 'வாரணம் ஆயிரம்' சூர்யாவை காதல் நாயகனாகவும் ரசிகர் மனதில் அரியணை ஏற்றியது.
ஆனால் 'காக்க காக்க'விற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலாவுடன் மீண்டும் இணைந்து 'பிதாமகன்' என்ற வித்தியாசமானதொரு முயற்சியைச் செய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். இந்த கதை தேர்ந்தெடுக்கும் திறன்தான் இன்றுவரைக்கும் ‘சிங்கம்’, ‘வேல்’, ‘அயன்’ போன்ற பக்கா ஆக்ஷன் படங்களை செய்துகொண்டே இன்னொருபுறம் ‘கஜினி’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘ரத்த சரித்திரம்’, ‘7-ம் அறிவு’, ‘24’ என வித்தியாசமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதன் பின்னணி.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக அக்கறையுள்ள குடிமகனாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் சூர்யா. 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலமான அவரின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. அவற்றைப் பற்றி 'அவன் இவன்' திரைப்படத்தில் சூர்யாவே பேசும் காட்சி அவரை சரியாக புரிந்துகொள்வதற்கு உதவக்கூடியது.
திரையில் அவர் நடிப்பும், பொதுவெளியில் மக்கள்நலன் சார்ந்த அவர் குரலும் தமிழ் சமூகத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமானது. இன்னும் இன்னும் வெரட்டி வெரட்டி வெளுங்க சூர்யா.