தமிழ் திரையுலகில் புதுமைகளும், வித்தியாசங்களும் எப்போதாவது தான் நிறைவேறும். அப்படியான ஒரு புதுமை தான் ‘சதுரங்கவேட்டை’. இதே நாளில் 2014-ஆம் ஆண்டு வெளியானது இத்திரைப்படம். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நிச்சயம் பேசக்கூடிய, நினைவுபடுத்தக்கூடிய சினிமாவாக மனதில் நிற்கிறது ‘சதுரங்கவேட்டை’.
ஒரு ரசிகனுக்கு ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வித அனுபவம் தான். அப்படியான ஒரு அனுபவத்தை தந்த படம் சதுரங்க வேட்டை. நெகட்டிவான காட்சிகளைக் காட்டி, அதன் வழியாக ஒரு பாசிட்டிவ் எண்ணத்தை விதைக்கும் இடத்தில் தனித்து நிற்கிறது திரைப்படம். ஏமாறுபவனைப் போலவே, ஏமாற்றுபவனும் சரிசமமான வேதனையைப் பெறுவான் என்பதே படத்தின் சாரம். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றால், அந்தப் பணத்தை சம்பாதிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைக்கும் நாயகனின் ஆட்டமே சதுரங்கவேட்டை படத்தின் ஒன்லைன்.
ஹீரோவாக நட்ராஜ். சிறு வயதில் சமூகத்தால் விரட்டியடிக்கப்படுகிறான். பிறகு, அதே சமூகத்தை நாசம் செய்கிறான். உலகில் ஆகச்சிறந்த சொல்லாக அவனுக்கு தெரிவது பணம் மட்டுமே. பிறரின் ஆசையைத் தூண்டுவது, அதன் மூலம் பணத்தை மோசடி செய்து சம்பாதிப்பது என்பதே அவனது கொள்கை. இரிடியம் கோபுரம் வீட்டில் இருந்தால் லெட்சுமியே வீட்டில் இருப்பது மாதிரி, மருத்துவ குணம் கொண்ட மண்ணுளிப் பாம்பு, கேன்சரை குணப்படுத்தும் அமெரிக்க ஏரித் தண்ணீர், லட்சங்களில் சம்பாதிக்க ஈமு கோழி, போட்ட பணத்துக்கு டபுள் ரிட்டர்ன் தரும் எம்.எல்.எம் கம்பெனி என எளியவர்களின் வாழ்க்கையில் விளையாடிய பல மோசடி கதைகளை காட்சிகளாக்கி, அறிவு புகட்டிய படமாக மனதில் நிற்கிறது சதுரங்கவேட்டை.
வில்லனை அழிக்கும் ஹீரோவின் கதை அல்ல. அசாத்தியமான கதையம்சமும் அல்ல. அனால் அன்றாடம் நாம் கடந்து செல்லும் மோசடி சம்பவங்கள் அல்லது நேரடியாக நாமே பாதிக்கப்படும் ஏமாற்றங்களை மையமாக கொண்டு படம் உருவாகியிருக்கும். மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி, ஈமு கோழி, இரிடியம் கோபுரம் என சாதாரன மக்களுக்கு நிகழும் மோசடிகளை கண்ணுக்கு முன் நிறுத்திய இடத்தில், ரசிகர்களோடு எளிதில் கனெக்ட் ஆகிறது சதுரங்கவேட்டை. இதுவே இந்தப் படத்தின் வெற்றியும் கூட.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் வசனங்கள். ஒரு காட்சியின் நம்பகத்தன்மையை வசனங்களே செய்கிறது. 'நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்’, ஒருத்தனோட ஆசைய தூண்டனும், அப்போ தான் அவன ஈஸியா ஏமாத்த முடியும்’, 'உன்னை ஒருத்தன் ஏமாத்தினா, அவனை எதிரியா நினைக்காதே... ஏன்னா, ஒரு வகையில அவன் உனக்கு குரு மாதிரி’ 'நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்’என ஒவ்வொரு வசனங்களும் ‘தெறி’ ரகம்.
‘வெள்ளை வேட்டி, வெள்ளை சட்ட போட்டா ஒருத்தனை ஏமாத்துற தைரியம் எங்க இருந்து வருதுன்னே தெரியலை ’ என மோசடி மன்னனாக காந்திபாபு கேரக்டரில் நட்டி அச்சு அசலாகப் பொருந்தியிருப்பார். அவரின் நடிப்புக்கு இரிடியம் கோபுரத்தை விற்கச் செல்லும் இடத்தில் ஒயிட் காலர் ஒருவரிடம் பேசும் காட்சியே ஒரு சோற்று பதம். அவருக்கு நேரெதிராக, அன்பு மட்டுமே பிரதானம் என அழுத்தமாக மனதில் நிறைவார் நாயகி இஷாரா.
நடப்பு அரசியலில் தொடங்கி, குட்டி பெட்டி மோசடி வரையிலும் டீடெயிலுங்குடன் பேசியிருப்பார் இயக்குநர் ஹெச்.வினோத். கேண்டிட்டான திரைக்கதை, அசால்டான நடிப்பு, பரபரப்பான காட்சிகள் என அந்த சமயத்தில் ட்ரெண்ட் செட்டிங் சினிமாகாவே பார்க்கப்பட்டது சதுரங்க வேட்டை. இந்த சமூகத்தில் மோசடிகளும், மோசடி ஆசாமிகளும் எப்படி உருவெடுக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி முடியும், மோசடியிலிருந்து நம்மை எப்படி காப்பது என இறுதியில் அனைத்துக்குமான பாடமாக அமைந்தது படம். அவசியமான சினிமாவாக அமைந்த ‘சதுரங்க வேட்டை’யை தாராளமாகக் கொண்டாடலாம்.