ஹாலிவுட் திரைப்பட உலகின் முக்கியமான நிகழ்சிகளில் ஒன்றான ‘காமிக்-கான்’ (COMIC-CON) வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் காமிக் உலகின் ஜாம்பவானான மார்வெல் நிறுவனம் ஒன்றரை மணிநேரத்திற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் மார்வெல்ஸின் அடுத்தடுத்து வரும் தயாரிப்புகள் குறித்த அப்டேட்களை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதில், அடுத்த வரவிருக்கும் அவெஞ்சர்ஸ் படத்தில் முன்பிருந்த சூப்பர் ஹீரோக்களே தொடர்வார்களா? அல்லது புதிய சூப்பர் ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு மார்வெல் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. அதிலும், அடுத்து வர இருக்கும் அவெஞ்சர்ஸ் Phase 4-ல் ‘அவெஞ்சர்ஸ் : சீக்ரெட் வார்’ தான் இடம்பெறும் என ஹாலிவுட் ரசிகர்கள் அனைவரும் பெரும்பாலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதற்கு மிகப்பெரிய டைம்லைன் கொண்ட கிளைக்கதைகள் தேவைப்படும் என்பதால் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார் எடுப்பதற்கு 10 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார் படத்தை எடுப்பதற்கு எண்ட் கேமை விட இரண்டு மடங்கு பணிகள் இருக்கும் என்பதால் இதனை தற்போதைய சூழ்நிலையில் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதைத் தொடர்ந்து கேப்டன் மார்வெல் மற்றும் ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தில் வரும் ஸ்கர்ல்ஸ் கதாப்பாத்திரத்தை முன்னிலைப்படுத்தி அவெஞ்சர்ஸ்: தி சீக்ரெட் இன்வென்ஷன் என்ற திரைப்படம் உருவாக 70 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளது என ஹாலிவுட் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவெஞ்சர்ஸ்-க்கு Shield head Quarters இருப்பது போல், அடுத்து வர இருக்கும் படங்களில் Sword என்ற Head Quarters-ஐ அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி Young Avengers என்ற ஒரு படம் வர 60% வாய்ப்புள்ளது. ஏனெனில், அடுத்த அயர்ன் மேனாக மார்வெல் நிறுவனம் தெரிவித்து வருவது ஸ்பைடர் மேனைதான். எனவே, இந்த புது டீம் இளம் சூப்பர் ஹீரோக்களுடன் கைகோர்த்து நிக் ஃபியூரி என்ற கதாப்பாத்திரம் பயணிக்கும் வகையில் யங் அவெஞ்சர்ஸ் படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று சீரிஸ்களில் எதை மார்வெல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதை வரும் 20ம் தேதி நடக்கவிருக்கும் காமிக்கான் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதுவரை அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறப் போகிறது என்பது உண்மை.