2019ம் ஆண்டுக்கான உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் நாளிதழ். இதில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகி Taylor Swift முதலிடம் வகிக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 185 மில்லியன் டாலர்.
இதில் முதல் 10 வரிசையில் பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து, அவெஞ்சர்ஸ் நடிகர்கள் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்), ராபர்ட் டெளனி ஜூனியர் (அயர்ன் மேன்) இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஸ்கெர்லெட் ஜான்சன், ஜாக்சி சான், ப்ராட்லி கூப்பர் என பலர் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு பிரபலம் மட்டும் உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களின் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வேறு யாருமில்லை, பாலிவுட் உலகின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் 33வது இடத்தில் உள்ளார்.
இவரது ஆண்டு வருமானம் 65 மில்லியன் டாலராக உள்ளது (444 கோடி ரூபாய்). இவர் ஒரு திரைப்படத்திற்கு 5 மில்லியன் முதல் 10 மில்லியன் டாலர் (30 கோடிக்கும் மேல்) வரை சம்பளமாக வாங்குவதாக ஃபோர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் டாடா, ஹார்பிக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். 51 வயதாகும் அக்ஷய் குமார் பாலிவுட்டின் சூப்பர் ஹாட் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
மேலும், அக்ஷய் குமாரின் அறிவியல் சார்ந்த படமான மிஷன் மங்கள் அடுத்த மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. அதன் பிறகு ஹவுஸ்புல் 4, லஷ்மி பாம் போன்ற பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, அமேசான் ப்ரைம் வெப் சீரிஸிலும் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.