யார் அங்கே?
யார் அங்கே?
யாரடா அங்கே?
இந்த வசனத்திற்கு இன்றோடு 13 வயது.
இந்த நூற்றாண்டிற்கான தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் வடிவேலு. அவரின் பெருமையைப் பேச புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். இப்படியான கலைஞனுக்கு தமிழ் சினிமா என்ன செய்திருக்கிறது என்று கேள்வி எழுந்தால் இயக்குனர் சிம்புதேவன் காலரை தூக்கிவிட்டு சொல்வார் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்ற படத்தை வடிவேலுக்காக கொடுத்திருக்கிறேன் என்று. ஆனால் இதைத் தாண்டியும் 13 வருடம் கழித்து கொண்டாட இந்த படத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் முந்தைய காலங்களில் கலைஞர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கலைவாணர் போன்றோர் நின்று ஆடிய அரசியல் நையாண்டி (Political Satire) வகைமையில், அதன்பின் இருந்த வெற்றிடத்தை இடையில் மணிவண்ணன் போன்றோர் தகர்க்க 'இம்சை அரசன்' எடுத்து வைத்தது 23 அடி பாய்ச்சல்.
வடிவேலு எனும் ஒரு நடிகர். ஒரு சமூகத்தையே தன் நகைச்சுவையால் ஆள்கிறார். நம் அன்றாட வாழ்வை தன் பகடியால் எள்ளி நகையாடுகிறார். இது நிதர்சனம் என்றாலும் இதுதான் இம்சை அரசனின் கதைக்களமும்கூட. தன்னை ஒரு மன்னனாகவே முன்னிறுத்தி ஆள்பவர்களை கேள்விகேட்டிருப்பார் வடிவேலு. அந்த உரிமை அவருக்கே உரியது.
வடிவேலு தன் நடிப்பை இந்த படத்திற்கு முன்னரே நிரூபித்து விட்டார். இருந்தாலும் ஒரு உதாரணம் சொல்லவேண்டுமெனில், சில படங்களில் காமெடியான ஹீரோ ரோல் செய்தவர்களே சீரியஸாக பேசவேண்டுமென்றால் கொஞ்சம் யோசிப்பார்கள். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயத்தில். அசல் கலைஞன் என்பவன் இந்த பயத்தைக் கடந்தவன். ஒரு தலைமுறையே வடிவேலுவை காமெடியனாக பார்த்து வளர்ந்திருக்கிறது. ஆனாலும் படத்தின் தனக்கான இரண்டாவது ரோலில் முழுக்க சீரியஸாகி மாஸ் ஹீரோவாகவே மாறியிருப்பார். இதில் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம் அந்த மாற்றத்திற்கு அவர் எடுத்துக்கொள்வது ஒரு ஷாட்டாக இருக்கும். அரசனுக்கான அந்த திமிரை ஒரு பார்வையில் கடத்திவிட்டு சீரியஸாகிவிடுவார்.
அடிப்படையில் ஒரு கார்டூனிஸ்ட்டான இயக்குனர் சிம்புதேவன், இந்த படத்திற்கு Storyboard முறையை பின்பற்றினார். அதாவது, படத்தின் எல்லா காட்சிகளையும் முதலிலேயே ஓவியமாக வரைந்துவிடுவது. அதை அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கொடுத்துவிட்டு பட ஷூட்டிங்கை தொடங்குவது. இப்படியாகத்தான் ஒரு மன்னர்காலத்து படத்தை, அத்தனை நடிகர்கள் நடித்த படத்தை வெறும் நான்கு கோடி ரூபாயில் எடுத்து முடித்தனர் ஷங்கர்-சிம்புதேவன் கூட்டணி.
கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தின் பெரும்பலம். பெரிய பட்ஜெட் எடுத்துக்கொள்ளாமல் அதேநேரத்தில் அரண்மனைக் காட்சிகளை அத்தனை பிரம்மாண்டமாக வடிவமைத்த விதம் பெரும் பாராட்டுதலுக்குரியது. பாடல்களிலும் புதுமை காட்டியிருந்தார் சிம்புதேவன், சபேஷ்-முரளி துணையுடன். ஒரு பீரியட் படம் என்பதால் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டதுபோன்ற ஒரு உணர்வுடனேயே இருக்கும். ஆனாலும் கேட்க புதிய அனுபவமாகவும் இருந்தது.
பட்ஜெட், அரசியல் நையாண்டி, வடிவேலு ஹீரோ என பல முன்மாதிரிகளைக் கொடுத்த 'Trend Setting' படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இருந்தாலும்கூட அதற்கடுத்து இப்படி ஒரு படம் இன்னும் தமிழ் சினிமாவில் வரவேயில்லை.