பூசி மெழுகப்பட்ட காதல் கதைகளுக்கு நடுவே, ஒரு திரைப்படத்தைப் பார்த்து நம் வாழ்க்கையாக, நம் வலியாக, நம் காதலாக இந்தக் கதை இருக்கிறதே என உணர்ந்திருக்கிறீர்களா..?
அப்படியான திரைப்படங்களின் முன்னோடி 'காதல் கொண்டேன்' வெளியாகி இன்றோடு பதினாறு ஆண்டுகளாகிறது.
இந்தப் படத்தை வெறும் ஒரு பொருளாதார விளிம்புநிலை மனிதனின் கதை என்று சொல்லிவிடமுடியாது. உண்மையில் நாம் எல்லோருமே அப்படி ஒரு சிக்கலான காலகட்டத்தை நம் வாழ்வில் கடந்துதான் வந்திருப்போம். அப்படியான நிலைகளில் நமக்குள்ளிருக்கும் ஒரு உண்மை மனிதன் வெளிப்படுவான். அவன் பற்றியான கதைகளையே தொடர்ந்து தன் படங்களில் பதிவு செய்துவருகிறார் இயக்குனர் செல்வராகவன். செல்வராகவன் கையில் எடுக்கும் கதைக்களங்கள் தான் மாறுபடுமே தவிர கதைநாயகனாக அந்த விளிம்புநிலை மனிதனையே எப்போதும் எடுத்துக்கொள்வார்.
ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தொடர்ந்து தகர்த்து வருகின்றனர். அந்த பயணத்தில் செல்வராகவன் செய்த அசாத்தியமான முயற்சிகள் தொடங்கிய இடம் ‘காதல் கொண்டேன்’. தனுஷுக்கு இது இரண்டாவது படமாக இருந்தாலும் அவர் உண்மையில் நாயகனாக மாறிய இடம் ‘காதல் கொண்டேன்’ தான். அத்தனை பிரமிப்பான நடிப்பை தனுஷ், இந்தப் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் என எல்லோரிடமிருந்தும் வாங்கியிருப்பார் செல்வா.
ஒவ்வொரு நடிகர்களும் பின்புலத்தில் ஒரு அடையாளத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒன்றை தொலைத்ததைப் போலவே இருக்கும் தனுஷும், உலகைப் புதிதாகப் பார்க்கும் முகபாவனையிலேயே இருக்கும் சோனியா அகர்வாலும் சினிமாவிற்கு எப்போதும் வேண்டப்பட்டவர்கள். உதாரணம் தேவைப்பட்டால் இருவரும் வகுப்பறையில் கைகொடுத்துக்கொள்ளும் காட்சியைப் பாருங்கள்.
‘காதல் கொண்டேன்’ படத்தைப் பற்றி யோசித்தால் முதலில் நினைவுக்கு வருவது யுவனின் இசையாக இருக்கும். காரணம் இந்தப் படத்தின் பாடல்களிலோ, பின்னணி இசையிலோ மகிழ்ச்சி, ஆரவாரம், சோகம், பாசம், காதல் என்று எதுவுமே வெளிப்படாது. வெறும் வலி, வலி, வலி மட்டுமே. ஒரு வலி தன் அழுகையை பீறிட்டு வெளிக்கொண்டுவருகிறது என்ற உணர்விலேயே படத்தின் மொத்த இசையும் இருக்கும். கதையும், செல்வாவும் அதைத்தான் வேண்டி நின்றனர்.
இது ஒரு ஆணாதிக்கப் பார்வையில் இருந்து பேசும் படம் என்பது ஒரு தட்டையான விமர்சனம் மட்டுமே. செல்வா ஒரு இயக்குனராக சமூகத்தின் குரூரமான பக்கங்களை பதிவு செய்பவர் மட்டுமே. அவர் சொல்லும் காதலை, தீர்வாக நிறுத்தும் பழக்கம் அவருக்கே கிடையாது. மாறாக இந்த உலகிற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறது, அந்த பக்கத்தில் ஒரு ஆண் தான் விரும்பியே பெண்ணை தனக்கான உலகத்தில் மட்டுமே வாழவைக்க ஆசைப்படுகிறான். இது உங்களுக்கு அதீதமானதாகத் தோன்றினால் நீங்கள் இன்னும் இந்த உலகை, இந்த மனிதர்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.
இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள இதைச் சொல்கிறேன், படத்தின் மொத்தக் கதையையும் அந்த வகுப்பறையின் கடைசி பெஞ்ச்சில் உட்கார்ந்து கதாநாயகன் கற்பனை செய்வதாக யோசித்துப்பாருங்கள். இப்படி கற்பனை செய்த கதை உங்களுக்கும் ஒன்று இருக்கும். இல்லையென்றால் பரவாயில்லை, நீங்கள் கொடுத்துவைத்தவர். அந்தக் கன்னத்தின் ஓரத்தில் கொஞ்சம் சாக்பீஸ் துகள் ஒட்டியிருக்கிறது, துடைத்துக்கொள்ளுங்கள்!