"மலையாளத்தின் இந்த வார நல்லபடம்"
இனி மலையாள பட விமர்சனங்களை இப்படித் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் 'லூகா' என்ற தரமானதொரு திரைப்படத்தைத் தந்திருக்கிறது மலையாளம் கூறும் நல்லுலகு.
இயக்குனர் அருண் போஸ் இயக்கத்தில், டொவினோ தாமஸ், அஹானா கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து இந்த வாரம் வெளிவந்திருக்கிறது லூகா. லூகா மிகவும் திறமையான கலைஞர், அவர் தன் கலையின் மூலமாக வாழ்க்கைக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்கிறார். வேதியியலில் ஆராய்ச்சியாளரான நிஹாரிகா அவரது வாழ்க்கையில் மேலும் வண்ணமயமானதாக நுழைகிறார். இருவரும் அந்த பயணத்தில் வெற்றியடைகிறார்களா என்பதே கதை.
ஒரு அசல் கலைஞனின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் மலையாளத் திரையுலகம் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. அதிலும் இந்தப் படம் மொத்த உலகமும் ஒரு கலைஞனின் அகவுணர்வாய் இருந்தால் எப்படியிருக்கும் என்ற இடத்தில் இருந்து பேசுகிறது. திரைக்கதையில் மிகப்பெரிய தைரியத்துடன் இறங்கியிருக்கிறது அருண் போஸ் - மிருதுல் ஜார்ஜ் கூட்டணி. படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் இறந்துவிடுகிறார். இப்படியாக ஒரு கதையை தொடங்கும் தைரியம், ஒரு கதையை வைத்தே இன்னொரு கதையின் முடிவை சொல்வது என இறங்கி அடித்திருக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் நடிகர்கள். டொவினோ எந்த கேரக்டரிலும் பொருந்தும் ஒருவராக மாறிவிட்டார். தன் நடிப்பிற்கு பெரிதும் வேலை வைக்கும் ஒரு கேரக்டர், ஆனால் நம்பி இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படியாகவே படத்தின் மற்ற நடிகர்களும் தங்கள் பங்கிற்கு படத்தை நடிப்பின் மூலம் நிரப்புகிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு , மழையை ஒரு கேரக்டராகவே மாற்றிய ஒலிப்பதிவு என அத்தனையும் ஆஸம். ஆனாலும் இவற்றை மீறி என்னை கவர்ந்தது படத்தின் எடிட்டிங். படத்தின் கதையில் அடிக்கடி பழைய கதையை ஞாபகப்படுத்துவது, எந்தவொரு காட்சிக்கும் முதல் ஷாட்டாக ஒரு க்ளோசப்பில் இருந்து தொடங்குவது என பின்னி பெடலெடுத்திருக்கிறார் எடிட்டர் நிகில் வேணு.
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றே தோன்றிய ஒரு குறையைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. மழையின் ஈரம் வேண்டும் என்பவர்கள் காதலோடு இந்த படத்திற்கு செல்லலாம்.