அது கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் பட ஷூட்டிங் என நினைக்கிறேன். படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமல், நாகேஷ், க்ரேஸி மோகன் என சிலர் ஒரு பக்கமாக இருக்க, ரொம்ப நேரமாக ஒருவர் ஃபோர்க்கை வைத்து சிக்கன் துண்டை குத்தி, எடுக்க முயற்சிக்கிறார். இதை கவனிக்கும் நாகேஷ் அவரிடம் சென்று, “என்ன இவ்வளோ நேரமா குத்துற, கோழி சரியா சாகலயா?” என்றதும் மொத்த செட்டும் அதிரும்படி சிரிப்பொலி எழுகிறது. இந்த சம்பவத்தை, ஒரு பேட்டியின்போது க்ரேஸி சொல்லியிருந்தார்.
சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து தன்னுடைய கலைக்குத் தேவையானதை கவனிக்கத் தவறாதவர் க்ரேஸி மோகன் என்பதற்கு இதை ஒரு மெல்லிய உதாரணமாகக் கொள்ளலாம். அவர் எழுதிய பல நகைச்சுவைக் காட்சிகள் அவருக்கு அன்றாடம் நிகழ்ந்தவைகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை என அவரே சொல்லியிருக்கிறார். நகைச்சுவைகளை தேடி நகரும்... இல்லை, நகைச்சுவைகளை தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளும் ஒரு கருவியாகவே தன்னை தகவமைத்துக் கொண்டவர் இன்று இறந்துவிட்டார் என்ற செய்தி பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இன்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வரத் துவங்கிய சில நிமிடங்களிலேயே, அவருக்கு சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது; அவர் குணமாக பிராத்திப்போம் என பின்னாலேயே வந்த முகநூல் பதிவுகளைப் பார்க்க முடிந்தது. நம்மோடு அவர் தனது கலையால் எவ்வளவு இணைந்திருக்கிறார் என்பதற்கான சாட்சிகளே, அவர் மீண்டு வர பிரார்த்திப்போம் என்கிற வேண்டுகோள்கள். யார் அவர், எப்படி நம்மோடு இந்த அளவுக்கு நெருங்கியிருக்கிறார், சும்மா சொல்ல ஆரம்பித்தால் கூட அவரது நான்கைந்து, ஒன்லைனர்களை அத்தனை சுலபமாக சொல்ல முடிகிறது? இதற்கு அவரது நண்பர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியிலிருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டலாம். “அவரது திறமைகளை குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாகத் தன்னை காட்டிக்கொண்டார் என்பதுதான் உண்மை”.
ஆம், எந்தப் பக்கம் இருந்து எடுத்துக் கொண்டாலும், அவரது நகைச்சுவைகள் புரியாமல் போய்விடும் அறிவுஜீவித் தன்மை கொண்டிருக்கவில்லை. ஒரு வகையில், இது எல்லாமே நம்முடைய வாழ்க்கையிலும் கூட நடந்துவிடும் சம்பவங்கள்தான். ஆனால், அதை எடுத்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் கலையாக உபயோகிப்பது அவரால் முடிந்திருக்கிறது என்பதுதான் விஷயம். அவரது நாடக சாதனைகள் பற்றி அதிகம் தெரிந்த பலரும் பின்னாட்களில் எழுதுவார்கள், மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என நம்புகிறேன். சினிமாவிலேயும் கூட, ஒருவரால் மட்டும் சொல்லி முடித்துவிட முடியாத அளவுக்கான காரியங்களை செய்திருக்கிறார் அவர்.
ஒரு ரைட்டர் சீரியஸாய் எழுதி, சீரியஸாய் எடுத்த காட்சிகூட காமெடியாய் மாறிவிடுவது சுலபம். ஆனால், காமெடியாய் எடுத்து அது காமெடியாகவே வெளியேறுவது சாதாரணமான விஷயம் இல்லை. ஆனால் க்ரேஸி எழுதிய பல நகைச்சுவைகளும், அதே பதத்தில் காட்சிகளாகவும் உருவெடுத்திருப்பதற்கு, அந்த இயக்குநருக்கோ, நடிகருக்கோ எவ்வளவு பங்குண்டோ, அதே அளவுக்கு க்ரேஸி மோகனுக்கும் பங்குண்டு. இது காட்சியாக எப்படி மாறும், காட்சி நடக்கும் சுற்றுப்புறத்தில் என்னென்ன இருக்கும் என்பதை எல்லாமே கூட மனதில் வைத்து எழுத, காமெடி மட்டும் வந்தால் பத்தாது, க்ராஃப்ட் என்ன என்றும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு நாடகம் ஏதாவது கருத்துச் சொல்வது அவசியமா அல்லது பொழுதுபோக்கிற்கு மட்டும்தான் நாடகமா எனும் கேள்விக்கு “சிரி, சிந்தி; சிந்திக்க முடியவில்லையா, சிரி, மீண்டும் சிரி என்பதுதான் எனது நாடகங்களின் கருத்து. ஏனென்றால் சிரிப்பதையே மிகப் பெரிய சமூக சீத்திருத்தமாக நான் கருதுகிறேன்.” என்றவர் அவர்.
அந்த காரணத்தினாலேயே, அவரின் பலப்பல காமெடி காட்சிகளை நம்மால் அப்படியே எடுத்துக் கொண்டு, மனதில் பதிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வார்த்தைகளை வைத்து விளையாடும் வித்தை பற்றிய தெளிவு அவருக்கு இருந்தது. இதனால் மிக பலமான ஒரு நகைச்சுவை உரையாடலை அவரால் கட்டமைக்க முடிந்தது. உதாரணமாக பஞ்சதந்திரத்தை எடுத்துக் கொள்வோம். மெய்ன் லீடிலேயே ஐந்து கதாபாத்திரங்கள். இதில் ஒருவர் மட்டும் கலாய்ப்பார், மற்றவர்கள் கலாய்க்கப்படுவார்கள் என வைத்துக் கொண்டால் அது ஓரளவுக்கு சுலபம். ஆனால், இதில் ஐந்து நபர்களுமே நகைச்சுவையில் பங்குகொள்ள வேண்டும், அதுவும் வசனங்கள் மூலமாக.
15 வருடங்களுக்குப் பிறகுமே கூட அந்தப் படம் க்ளாஸிக் காமெடி பட்டியலில் இருக்க க்ரேஸியின் பங்கு மிக முக்கியமானது. இந்த ஒரு படம் மட்டுமே கிடையாது. இதுபோல புதுப்புது மாயங்கள் பல படங்களில் நடந்திருக்கிறது. அது நமக்கும் புரியும்படி நிகழ்ந்திருக்கிறது. காலம் முழுக்க நம்முடனே இருக்கவும் போகிறது. இத்தனையும் தாண்டி அவர் புகழும், வேலைகளும் நம் மூலம் வாழப்போகிறது என்ற நம்பிக்கை கொள்ள இன்னொரு காரணம் கூட இருக்கிறது, அவரது ஓரிரு நகைச்சுவைகளை நினைத்து மெல்லிய புன்னகையுடனேயே துவங்குகிறது, அவர் மரணத்திற்கான நம்முடைய வருத்தங்கள். அதுதான் `க்ரேஸி’ மோகன்!