நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர், விஷால் தரப்பு வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.
நடிகர் சங்க கட்டடப் பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 6 மாதகால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நேற்று இரவு தி.நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி பத்மநாபனிடம் நாளை நடிகர் சங்க அலுவலகம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.