முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இதில், சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அரசியலை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள என்.ஜி.கே. படம் மே 31ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று முன்தினம் டிரெய்லரும், படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது.
டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, படப்பிடிப்பின் போது பணியாற்றியது குறித்து நடிகர் நடிகைகள் சூர்யா மற்றும் சாய்பல்லவி, இயக்குநர் செல்வராகவன் என பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு பேசுகையில், “என்.ஜி.கே. படம் ரிலீசாக தாமதமானதற்கு காரணம் கடந்த ஆண்டு வெளிவந்த அரசியல் சார்ந்த படம் என தெரிவித்தார். அப்போது வெளிவந்த படத்தின் கதை அமைப்பும், என்.ஜி.கேவின் கதையமைப்புக்கும் தொடர்பு இருந்ததால் இயக்குநர் செல்வராகவன் கதையை மாற்றி எழுதவேண்டியதாக இருந்ததாலேயே என்.ஜி.கே வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என கூறினார்.
எஸ்.ஆர். பிரபுவின் இந்த பேச்சு கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு அரசியலை மையமாக வைத்து வெளிவந்த படம், நடிகர் விஜயின் சர்காரும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படமான நோட்டாவும் தான்.
எனவே இந்த இரு படங்களின் கதைக்கும், என்.ஜி.கே. படத்தின் கதைக்கும் எந்த அளவுக்கு தொடர்பும் இருந்திருக்கும் என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும் என பேசப்படுகிறது.