மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. நடிகராக தன்னுடைய வியக்கத்தக்க பங்களிப்பைக் கொடுத்துவந்த மோகன்லால் விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் ‘லூசிஃபர்’ வெளியாகி பெரிய ஹிட்டானது. தொடர்ந்து தமிழில் ‘காப்பான்’, மலையாளத்தில் ‘மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹம்’ போன்ற படங்களில் நடித்துமுடித்திருக்கிறார். தற்போது தான் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படம் பற்றிய அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல அற்புதமான வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. அதில் மிக முக்கியமான வாய்ப்பு அமைந்திருக்கிறது, நான் படம் இயக்கப் போகிறேன். பல படங்களில் கேமராவுக்கு முன்னால் நின்ற நான் இப்போது கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்கவும் இருக்கிறேன்” எனத் தொடங்கி நீண்ட மற்றும் நெகிழ்ச்சியான அறிவிப்பையும், சவுண்ட் க்ளவுடில் ஒரு வாய்ஸ் நோட்டையும் வெளியிட்டிருக்கிறார் மோகன்லால்.
ஒரு 3டி ஷோவுக்காக இயக்குநர் டி.கே.சஞ்சீவ் குமாருடன் மோகன்லால் பேசிய போது, `மைடியர் குட்டிச்சாத்தான்’ படம் இயக்கிய ஜிஜோ புன்னோஷியுடனும் ஒரு உரையாடல் நடந்திருக்கிறது. அப்போது, ஜிஜோ கூறிய Barroz – Guardian of D’Gama’s Treasure கதையை கேட்டிருக்கிறார் மோகன்லால். புதையலைப் பாதுகாக்கும் காவலன் Barroz பற்றிய கதை அது. குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும்படியான ஃபேன்டசியான இந்தக் கதை மோகன்லாலுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, இதை நான் இயக்கட்டுமா என்று கேட்டு, Barroz கதாபாத்திரத்திலும் நடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார். இப்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. எனவே விரைவில் Barroz – Guardian of D’Gama’s Treasure படம் பற்றிய மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.