ஆயூஷ்மேன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த பாலிவுட் திரைப்படம் 'அந்தாதுன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான 'அந்தாதுன்' திரைப்படம் பார்வைற்ற மனிதனாக வரும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. இப்படம் கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றது.
சீனாவில் பாலிவுட் நட்சத்திரங்களான ஆமீர் கான், சல்மான் கான் திரைப்படங்கள் நன்றாக ஓடி வசூலைக் குவித்துள்ளன. அவ்வகையில் இத்திரைப்படமும் வசூலில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் சீனாவில் 'பியானோ பிளேயர்' என்ற பெயரில் வெளியிட்டது.
இந்நிலையில் இப்படம் 13 நாட்களில் ரூ.200 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது குறித்து ட்விட்டரில் பலரும் மகிழ்ச்சி பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, 'தங்கல்', 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', 'பஜ்ரங்கி பைஜான்' வரிசையில் அந்தாதுனும் நான்காவது தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டதாக வணிக நிபுணர் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆயுஷ்மேன் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் சினிமா எப்போதுமே உலகளாவிய தன்மை கொண்டது. எல்லைகளையும் மொழிகளையும் உடைத்துக் கொண்டு அது செல்லும். அவ்வகையில் ஒரு சிறந்த சினிமாவுக்கான வரவேற்பை 'அந்தாதுன்' பெற்றுள்ளது. இது நமது நாட்டுக்கே பெருமை என்று கூறியுள்ளார்.