உலகம்

தமிழர்கள் மென்மேலும் வளர வேண்டும்! : மெல்போர்ன் நகரில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரையாடல்!

தமிழர்கள் மென்மேலும் வளர வேண்டும்! : மெல்போர்ன் நகரில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரையாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரைச் சென்றடைந்தார். 9-11-2024 அன்று மெல்போர்ன் நகரில் வாழும் தமிழர்கள் சார்பில் Victorian School of Languages பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு, உரையாற்றியதாவது:

மெல்போர்ன் நகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற உங்கள் அனைவரையும் ஒரே பகுதியில் ஒருங்கிணைத்து, இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த அப்பாவு 15 ஆண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றியவன்.

ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதை தற்போது நான் நினைத்துப் பார்க்கின்றேன். எவ்வாறு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வியப்பாக பார்க்கின்றேன். இங்குள்ள ஆசிரியப் பெருமக்களையும் நான் பார்க்கின்றேன்.

எவ்வளவு கடினமாக உழைத்து, இங்குள்ள குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்து, நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அருமையான நிகழ்ச்சிகளை தயார் செய்துகொண்டு வந்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பள்ளிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக என்ன உதவி தேவை என்பதை என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தால், அதை நான் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று, இப்பள்ளி இன்னும் மேம்பாடு அடைவற்கும், அனைவரும் தமிழ் கற்க வேண்டுமென்பதற்காகவும் வேண்டிய உதவிகளை நிச்சயமாகச் செய்வேன்.

தமிழர்கள் மென்மேலும் வளர வேண்டும்! : மெல்போர்ன் நகரில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரையாடல்!

நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி துறை உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும், அவர்களுக்கு ஒரு சிறு இடர்பாடு ஏற்பட்டுவிட்டால், அந்தந்த நாடுகளில் இருக்கின்ற அயலக அணிகளின் மூலமாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டால், எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் கூட, நம்முடைய தமிழ்ச் சொந்தங்களை காப்பாற்றி கொண்டுவருகின்ற அற்புதமான பணிக்காக ஓர் அமைச்சரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எங்களுடைய திருநெல்வேலி பகுதியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வறுமையில் இருப்பதால், சம்பாதிப்பதற்காக அங்கே செல்வார்கள்.

“மற்ற நாடுகளில் தமிழர் இருகிறார்கள், ஆனால், மலேசியாவில் மட்டும்தான் தமிழர்கள் அந்த நாட்டு மக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அண்ணா அவர்கள் மலேசியா சென்றபோது சொன்னார்.

அந்தளவுக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு என்ன தேவை என்பதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அதையும் உடனடியாக செய்து கொடுப்பார்.

ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு நாட்டிற்குச் சென்றவர், அங்கேயே இறந்துவிட்டால், அவருடைய உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 5 மாதம் அல்லது 6 மாதங்கள் ஆகும். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அயலக தமிழர் நல வாரியம் அமைத்ததன் மூலமாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையை உடனடியாக தொடர்பு கொண்டு, மூன்றே நாட்களில், அந்த உடலை விமானத்தில் கொண்டு வருவதற்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது.

அதுபோல், உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் படிக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு வாய்ப்புகளை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் தமிழை கற்பிக்காமல் போன வரலாறு உண்டு.

ஆனால், இப்போது கட்டாயமாக தமிழை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதன் காரணமாக அங்கெல்லாம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. நம்முடைய முதலமைச்சர் டெல்லி சென்றபோது, அங்குள்ள பள்ளிகளில் smart class room இருப்பதை நேரடியாக பார்வையிட்டதன் விளைவாக, தமிழ்நாட்டிலும் அவ்வாறு உருவாக்க வேண்டுமென்பதற்காக கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் smart class room அமைக்கப்படும் என்றும், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் பெறும் வசதியை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெற வேண்டுமென்பதற்காக அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

இணையதளம் மூலமே நீங்கள் தமிழை கற்றுக்கொள்ளலாம். 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான புத்தகங்கள் எவ்வளவு வேண்டும் என்பதை ‘தமிழர் குடும்பம்’ வாயிலாக எங்களுக்குக் கடிதம்மூலம் தெரிவித்தால், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்தே உங்கள் நேரத்திற்குத் தகுந்தவாறு இணைய வழியிலும் தமிழைக் கற்றுக்கொள்ளலாம்.

எனவே, அதையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் பேருக்கு கல்வி மறுக்கப்பட்டது. அக்கல்வியை அனைத்து சாராருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் வரை அனைவரும் எடுத்த முயற்சியின் காரணமாக, தற்போது இந்தியாவிலேயே பட்டப் படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது.

பாரதப் பிரதமர் அவர்கள், 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் பட்டம் பயில வேண்டும் என்ற இலக்கோடு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே 51 விழுக்காடு பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்களும் பட்டம் படித்திருக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இந்த அரங்கத்தில்கூட அதிகளவில் பெண்கள்தான் இருக்கிறீர்கள். சாமானிய பெண்களும் கல்வி பயில வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்த திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தால், 6,000 ரூபாயும், பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் 12,000 ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் 25,000 ரூபாயும், பட்டப் படிப்பு படித்திருந்தால் 50,000 ரூபாயும் கொடுத்ததால், தற்போது 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரையிலான பெண்கள் படிக்கிறார்கள் மற்றும் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பட்டிதொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்து, மாணாக்கர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 20 இலட்சம் மாணாக்கர்களுக்காக காலை உணவுத் திட்டத்தை தொடங்கி, அவர்களையும் படிக்க வைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பெருமையாகும்.

இந்தியாவில் 1996 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் பெங்களூரு மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், முரசொலி மாறன் அவர்கள் மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்தபோதுதான், முதன்முதலாக சென்னையில் TIDEL Park தொடங்கப்பட்டது.

அதன் விளைவாகத்தான், தற்போது ஆண்டிற்கு 2 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற காரணத்தினால்தான், அதிகளவிலான பொறியாளர்கள் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.

1996 ஆம் ஆண்டு வரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளைத்தான் செல்போனில் பயன்படுத்த முடியும். ஆனால், மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமிழுக்காக ஒரு software தயாரிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்ததால்தான் தற்போது நாம் செல்போனில் தமிழை உபயோகப்படுத்துகிறோம்.

தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு முயற்சிகள் மேற்கொண்டுள்ள தமிழர் குடும்பத்தை மனதார, நெஞ்சார தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக முதலமைச்சர் சார்பாகவும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் “வெளிநாடுவாழ் தமிழர்கள் தினம்” கொண்டாடப்படுகிறது.

அப்போது நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது, உங்கள் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தால், அதை முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அவற்றை செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். கொரோனா காலக்கட்டத்தின்போது, வெளிநாட்டிலிருந்து ஒரு விமானம் இந்தியா வந்தது என்றால், அதில் 20 பேர்தான் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.

எனவே, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்கும்பொருட்டு, டி.ஆர். பாலு அவர்கள் தலைமையிலான ஒரு குழு, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, எங்களுடைய தமிழ்ச் சொந்தங்கள் இந்தியா திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்ததன் அடிப்படையில், எந்த விமானம் இந்தியா வந்தாலும், அதில் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சொந்தங்களை வரவழைத்த பெருமை நம்முடைய முதலமைச்சர் அவர்களைச் சாரும்.

அதைப்போன்று பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தால், அதற்கான நிதி ஆதாரத்தையும் கொடுத்திருக்கின்றார். இந்த தமிழர் குழுமம் மென்மேலும் வளர வேண்டும்.

banner

Related Stories

Related Stories