ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
எனினும் உக்ரையின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடித்தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் விரைவில் சுதாரித்த ரஷ்ய ராணுவம் உக்ரைனிய படைகளை திருப்பி தாக்கியதில் உக்ரைனுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, நாங்கள் நினைத்ததை விட தற்போது அமைதிக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், ”ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஊடுருவலை அடுத்து விளாடிமிர் புடினுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. நாங்களும் நினைத்ததை விட தற்போது அமைதிக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இதனால் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.