கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்த பாதிப்பு ஏதும் இந்திய பணக்காரரான அதானியை பாதிக்காமல் இருந்ததோடு, அவரின் சொத்துமதிப்பும் கடுமையாக அதிகரித்து வந்தது.
இதற்கு முக்கிய காரணமாக பிரதமர் மோடியுடன் அதானிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு காரணமாக கூறப்படுகிறது. மோடி செல்லும் வெளிநாட்டு பயணம் எல்லாம் அதானியின் வியாபார நலனுக்காகவே என்ற விமர்சனமும் எழுந்தது. ஏற்கனவே இலங்கையின் மின்திட்டங்களை அதானிக்கு கொடுக்க இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்திருந்தது.
இந்த நிலையில், அதானியின் திட்டத்துக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபி விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதோடு மட்டுமன்றி அதானி நிறுவனத்துக்கு எதிராக கென்யாவில் போராட்டமும் வெடித்துள்ளது. கென்யா விமானப் பணியாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனைக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, "அதானியுடன், இந்திய பிரதமர் மோடிக்கு உள்ள நட்பு காரணமாக கென்யாவில் அதானிக்கு எதிராக நடக்கும் போராட்டம், இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான கோபமாக எளிதில் மாறக்கூடும்"என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.