அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயக கட்சிக்குள்ளேயே அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸையும் முன்மொழிந்த நிலையில், தற்போது அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது டிரம்ப்பின் பேச்சு அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், " கமலா ஹாரிஸ், தனது இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். தற்போது அவர் கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்து தற்போது அவருக்கே பின்னடைவாக அமைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமலா ஹாரிஸின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற நிலையில், அவரின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவரின் இந்த கருத்து இந்தியவர் மற்றும் கறுப்பினத்தவர் இடையே கமலா ஹாரிஸ்க்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.