கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பெண்களும் டிரம்ப் மேல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை எழுப்பினர். மேலும் அவர் மீது தேசவிரோத குற்றச்சாட்டும், மோசடி வழக்கும் நிலுவையும் உள்ளது.
அந்த வகையில் வழக்கு ஒன்றுக்காக டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்றத்தின் வளாகத்தில் இருந்த டிரம்ப் ஆதரவாளர் ஒருவர், தான் கொண்டுவந்திருந்த துண்டு பிரசுரங்களை வீசி எரிந்து பின்னர் அங்கேயே தீக்குளித்துள்ளார்.
உடனே அங்கிருந்த நபர்கள் அவர் உடலில் பற்றிய தீயை அணைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்குளித்தவர் புளோரிடாவை சேர்ந்த மேக்ஸ் அஸ்ரெல்லா (வயது 37) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவர் தீக்குளித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.