கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பெண்களும் டிரம்ப் மேல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை எழுப்பினர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல் (E Jean Carroll), டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார்.
1990-களின் காலகட்டத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் டிரம்ப்பை சந்தித்தபோது தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், இதனை குறித்து வெளியே சொன்னபோது தன்னை பற்றி அவதூறு பரப்பினார் என்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், தற்போது டிரம்ப்பை குற்றவாளி என்று நியூயார்க் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு பரப்பியதற்காகவும், அதனை சரிசெய்வதற்காகவும் மொத்தமாக 18.3 மில்லியன் டாலர் அவருக்கு இழப்பீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்றும், தண்டனைக்குரிய அபராதமாக 65 மில்லியன் டாலர் செலுத்துமாறும் ட்ரம்ப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், இந்த குற்றசாட்டுகளை டிரம்ப் மறுத்து இது குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக கீழமை நீதிமன்றமும் இந்த வழக்கில் டிரம்பை குற்றவாளி என்று கூறியதோடு அவருக்கு அபராதம் விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.