ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது.
இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா பேரழிவைத் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்தது.
அதன் வெளிப்பாடாக ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனமும் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது.
இந்த நிலையில், அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய காலங்களில் செயற்கை தொழில்நுட்பம் பெரிய அளவு வளர்ந்துள்ள நிலையில், தனது விளம்பர விநியோகப் பிரிவில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக அந்த பிரிவில் பணிபுரியும் சுமார் 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னணி நிறுவனமாக கூகிள் நிறுவனமே இந்த முடிவினை எடுத்தால் பிற நிறுவனங்களும் அதனை பின்தொடரும், இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர் என அச்சம் எழுந்துள்ளது.